Tuesday, April 14, 2015

புத்தாண்டு அன்று திருத்தல தரிசனம்

            இன்றய தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் (14/04/2015), சில கோயில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. கூத்தனூர் சரஸ்வதி கோயிலிலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆதிவினாயகர் கோவில். ஆலயம் அமைந்திருக்கும் கிராமத்தின் பெயர் திலதர்பணபுரி. தில என்றால் எள்; தர்பணம் என்றால் பித்ருக்களுக்காக செய்யும் வழிபாடு

       ஸ்ரீராமர் தனது தந்தையார் தசரத சக்ரவர்த்திக்காக பல இடங்களில் தர்பணம் செய்தார். ஆனால் பிண்டம் வைக்கும் பொழுதெல்லாம் பிண்டங்கள் ‘புழுக்களாக’ மாறினவாம். வேதனையடைந்த ஸ்ரீராமர் சிவபெருமானை வேண்ட, இந்த தலத்திற்கு வந்து தர்பணம் செய்யுமாறு அருள் செய்தாராம். அதன்படி இங்கு வந்து ராமபிரான் பிண்டங்கள் செய்ய, நான்கு பிண்டங்களும் நான்கு சிவலிங்கங்களாக உருப்பெற்றனவாம். இதனால் தசரதன் முக்தி பெற்றாராம். ஸ்ரீராமன் வழிபட்ட அந்த நான்கு சிவலிங்கங்களும் இங்கே இருக்கின்றன. இதனால் இந்த இடத்தில் ஈசன் முக்தீஸ்வரர் என அழைக்கப் படுகிறார்.

அம்மன் சொர்ணவல்லி. முக்தீஸ்வரரும்-சொர்ணவல்லி அம்மனும் பேரழகுடன் விளங்குகின்றனர். அற்புதமான அலங்காரம்.  இந்த இடம் பித்ரு காரியங்களுக்கு உகந்த இடமாக, காசி – ராமேஸ்வரத் திற்கு நிகராக சொல்லப்படும் தலம்.

      மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ஆதியில் வினாயகர் மனிதத் தலையோடு இருந்தார். பின்புதான் சிவபெருமானால் தலை கொய்யப்பட்டு, பின்னர் யானைத் தலையினைப் பெற்றார். 

      அவ்விதம் தலையைக் கொய்வதற்கு முன்னால், மனித முகத்தோடு இருக்கும் வினாயகர் இங்கே இருக்கிறார். எனவே இங்கு இருக்கும் வினாயகர் நரமுக வினாயகர் \அன அழைக்கப் படுகிறார். அதாவது மனைதத் தலையோடு! காண்பதற்கு அற்புதமாக இருக்கிறது.

       ஸ்ரீராமரே நீத்தார் காரியங்களைச் செய்த இடம் என்பதால், தேவைப் படுவோருக்கு நீத்தார் சடங்குகள் இங்கே செய்விக்கின்றனர் (சிரார்த்தம்-தர்பணம்-வருஷாப்திகம் போன்றவை). வேத பாடசாலையும் இருகின்றது.

       அழகும் அமைதியும் நிறைந்த கோயில். சென்று வாருங்களேன்.

  வழி: மாயுரம்-திருவாரூர் சாலையில், கூத்தனூருக்கு அருகே உள்ளது.

 நரமுக விநாயகர் 

ஈசன் முக்தீஸ்வரர் 


சொர்ணவல்லி


திருநாரையூர் - சனி பகவான் 

ஸ்ரீராமரின் தந்தை தசரத சக்ரவர்த்தி, வணங்கிய மூர்த்தி, திருநறையூரில் உள்ள ஈசன் இராமனாத சுவாமி.  

மேலும், இங்குதான் தசரதன், ரோஹினி சகடபேத சனீஸ்வர ஸ்ஞ்சார காலத்திலும், இப்பூவுலகைக் காப்பாற்ற சனிபகவானை வேண்டினாராம். 

சனிபகவானும் அவ்விதமே வாக்களித்தாராம். இத்தலத்தில், சனி பகவான் தனது வலது புறத்தில் மனைவி மந்தாதேவியுடனும் இடதுபுறம் மற்றொரு மனைவி ஜேஷ்டா தேவியுடனும் காட்சி தருகிறார்.

அவரது பாதத்தின் கீழே, மந்தாதேவியின் மகன் மாந்தி மற்றும் ஜேஷ்டா தேவியின் மகன் குளிகன் ஆகியோரும் தங்களது பெர்றோரை வணங்கியவண்ணம் காட்சி தருகின்றனர்.

போரில் வென்று திரும்பிய ஸ்ரீராமரும் இங்கு வந்து இராமனாத சுவாமியை வணங்கியிருக்கிறாராம்.

திரு நாறையூர் கோயில் முகப்பு (ராஜ கோபுரம் இல்லை)

சும்மா சொல்லல... நான் போயிட்டுதான் வந்தேன்... 


சனி பகவான் மனைவியருடனும் - பிள்ளைகளுடனும்


கூத்தனூர் சரஸவதி ஆலயம்

மஹா சரஸ்வதிக்கென்றே ஒரு ஆலயம். ஒருபள்ளிக் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர். ஆலயத்தின் வாசலில் நோட்டுக்களும்-பேனாக்களும் விற்கின்றனர்- அம்மன் காலடியில் வைத்து ஆசி பெற்றுச் செல்கின்றனர். சரஸ்வதின் அழகை சொல்லவும் வேணுமா?

கோயில் முகப்பு

மஹா சரஸ்வதி (இப்படம் நெட்டில் சுட்டது)

பிரசித்தி பெற்ற திரு நள்ளாறு சனிபகவான்

இக்கோயில் பற்றி எல்லோருக்கும் தெரியும் தானே?

திரு நள்ளார் கோபுரம்

இக்கோயிலுக்கு 20 வருடங்கள் முன்பு சென்றது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் கடைகள்..கடைகள்... க்யூ..க்யூ



திருநள்ளார் -  நள தீர்த்தம்.
மிக நன்றாக பராமரிக்கிறார்கள்.



Wednesday, April 8, 2015

குருதியில் நனைந்த மரங்கள் ..

செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை.

நேற்று காலை, ஆந்திரக் காடுகளில் 'கடும் தடையை' மீறி செம்மரம் வெட்டச் சென்ற பலர் வனத்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர். அதிலும் குறிப்பாக, பலர் எனது பகுதியைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில், இந்த செம்மரங்கள் வெட்டப்படுவதைக் குறித்து, நான் அறிந்த சில விவரங்களை தர விழைகிறேன்.

செம்மரங்களின் மதிப்பும், காடுகளில் அதன் இருப்பின் அவசியம் குறித்தும் இப்போதெல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்பதால் நேரடியாக விஷயத்துக்குள் செல்கிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்னர், நான் பள்ளி மாணவனாக இருந்த போதும், இதே போன்றதொரு சூழல்! செம்மரத்துக்குப் பதிலாக சந்தன மரங்கள். எங்கள் ஜவ்வாது மலைத் தொடர் முழுக்க நிறைந்து கிடந்த சந்த்ன மரங்களை இப்படித்தான் வெட்டிக் கடத்தினார்கள்.

இப்படி மரங்களை வெட்டி, மலையில் இருந்து வெளியே கொண்டு வந்து தர, வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வருவதில்லை. அதே மலைக்கிராம மக்களுக்கு ஆசைகளைத் தூண்டி இதை செய்ய வைப்பார்கள். வனத்துக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டிய வனவாசிகளே, பெரும்பணத்துக்காகவும், மது புட்டிகளுக்காக அதைச் செய்தனர்

இப்போது, அடையாளம் காட்டக்கூட ஒரு சந்தன மரம் இல்லாமல், ஜவ்வாது மலைத்தொடரே மொட்டையடிக்கப் பட்டு விட்டப் பின்னர், வியாபாரிகளின் கவனம், அடுத்ததாக செம்மரத்தின் மீது திரும்பியுள்ளது.

செம்மரம், தற்போது ஆந்திரக் காடுகளில் மட்டுமே வெட்டக்கூடிய அளவில் பெரிதாகவும், மறைவாகவும் இருக்கிறது. சரி! அந்த மரங்களை வெட்ட ஆட்கள் தேவையாச்சே?! ஏற்கனவே பல ஆண்டுகள் வெற்றிகரமாக மரம் வெட்டிய அனுபவம் கொண்ட ஜவ்வாது இமலைவாசிகளைப் பிடித்தனர்.
சந்தன மரங்களை வெட்டிப் பெரும் பணம் ஈட்டி, அதை செலவு செய்து விட்டு மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்கு வந்து நிற்கும் அந்தத் தலைமுறை ஆட்களுக்கு இது பெரிய வாய்ப்பாகப் பட்டது.
பெரும் குழுவினராகப் புறப்பட்டனர். ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 6000 ரூபாய் கூலி. தொடர்ந்து பத்து நாட்கள் வேலை. இரவில் சராயம், ஆடு மற்றும் இன்னும் பல சப்ளைகள். முன்பு வெறும் கோடலி, கை ரம்பம் வைத்து மரம் வெட்டியவர்கள் கைகளில் ஹிட்டாச்சி, யமஹா கம்பனிகளின் மின் அறுப்பான் தரப்பட்டது.

ஜவ்வாது மலைகளை அடுத்து, ஆந்திர சமவெளிக்காடுகள் கற்பழிக்கப் பட்டது. முப்பது வருடத்துக்கு முன்னர் போலில்லாமல், வனம், மரங்கள் குறித்த விழிப்புணர்வு பெரிதாக வந்திருக்கும் காலக்கட்டமாச்சே இது. ஆந்திர மற்றும் மத்திய வனத்துறையினர் இந்த செம்மரக் கடத்தலை தடை செய்து, கடுமையான காவலும் இட்டனர்.

சென்ற வருடத்தில், முன்னூறுக்கும் மேலான கூலித் தொழிலாளர்கள் அடர்ந்த காட்டுக்குள் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு ஜீப்பில் தனியாக மாவட்ட வன அதிகாரி சென்று மாட்டிக் கொள்ள, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்தேக் கொன்றனர், நாம் அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் எனக் குறிப்பிடும் இந்த வனவாசிகள். அதில் தமிழர்களே எண்ணிக்கையில் அதிகம்.

அந்தச் சம்பவம், மரக் கடத்தலின் மொத்த தட்ப வெப்ப நிலையையும் மாற்றி விட்டது.
ஆந்திர அரசு, செம்மரக் கடத்தலுக்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றது. அதன்படி, காடுகளுக்குள் மனிதர்கள் நடமாட்டமே மொத்தமாகத் தடைச் செய்யப் பாட்டது. மீறினால், அவர்களை சுட்டுக் கொல்வதற்கு சட்டரீதியான ஒப்புதல் கிடைத்தது. வனக்காவலர்கள் கூடுதலாக நியமிக்கப் பட்டு, அவர்களுக்கு நாட்டு எல்லைப் பாதுகாவலர்களுக்கு வழங்குவதைப் போன்ற, முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் வழங்கப் பட்டது.

அது மட்டுமல்லாமல், பல்வேறு அரசு சாரா குழுக்களை அமைத்து, அவர்களை தமிழகத்தில் உள்ள ஜவ்வாவது மலைத் தொடர் கிராமங்களில் வந்து விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர். நாடகங்களை நடத்தினர். காசுக்கு ஆசைப்பட்டு, மரம் வெட்ட ஆந்திரா வந்தால் அவர்கள் வீட்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்பதை மிகத் தெளிவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நாடங்கள் மூலம் விளக்கிச் சொன்னர்.

தமிழக அரசும் கூட இதில் கவனம் எடுத்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். உதாரணத்துக்கு, பெரும் குழுவாக பேருந்தில் சித்தூர்,திருப்பதி சென்றால் வனக் காவலர்கள் செய்தி அறிந்து, அங்கே சென்று அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பியதெல்லாம் உண்டு.
இத்தனையையும் மீறி, இன்று ஆந்திரக் காட்டுக்குள் செம்மரம் வெட்டும் கும்பல் ஒன்று சுடப்பட்டு இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இயற்கை நியதிப்படி, செத்தவர்களில் பெரும்பாலானோர் எங்கள் திருவண்ணாமலை மாவட்டக் கூலித் தொழிலாளர்கள்தாம்.

ஆனால், அவர்களை 'அப்பாவித் தொழிலாளர்கள்' என்று நான் சொல்ல விரும்ப வில்லை. செம்மரம் வெட்டச் சென்றவர்கள், அதில் இருந்த அபாயத்தை முழுதாக அறிந்திருந்தார்கள். அதற்கேற்றார் படி அவர்களுக்கு விலையும் மிக அதிகமாக நிர்ணயக்கப் பட்டிருந்துள்ளது. முழுக்க, முழுக்க தங்கள் பேராசையின் காரணமாகவே இந்த சட்டவிரோதமான காரியத்துக்கு அவர்கள் சென்றிப்பார்கள்.

இனி, இந்த மரணங்கள் அரசியலாக்கப்பட்டு விடும். ஆந்திர மிருகங்கள், அப்பாவித் தமிழர்களை வேட்டையாடிக் கொன்று விட்டது என (தற்போது வேலையில்லாமல்) இருக்கும் தமிழின போராளித் தலைவர்களும் ஆவேசமாக பேட்டியளிப்பர். போராடுவார்கள்.

எங்கோ சொகுசாக அமர்ந்தபடி, இவர்களை எய்த பெரும் பண முதலாளிகள் என்ற வில்லை விடுத்து, அப்பாவி அம்புகளுக்கா தண்டனை? என்ற பெரிய சோஷியலிஸ தர்க்கத்தை முன்வைத்து, பிரச்சனையை முடிவே இல்லாத வேறு தளத்துக்குத் தள்ளி விட பல துடிப்பான இளம் நெஞ்சங்கள் துடிக்கும்.
மனித உரிமைக் குழுக்கள் வேறு உள்ளனவே!

பரிதாபமாக நிர்கதியற்று நிற்கும் காடுகளின் நியாயங்கள் புறக்கணிக்கப்படும்.
அதைப் பாதுகாக்க, பலமுறை தனது உயிரைத் தந்த வனப் பாதுகாவலர்களின் குடும்பங்கள் மறக்கப் படும். சட்டப்படியான தடையை மீறி, கடுமையான எச்சரிக்கையை மீறி, மாநிலம் விட்டு மாநிலத்துக்கு, மரம் வெட்டும் (சமயத்தில் மனிதனையும்) ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்கள் பக்கம் நின்று மனித உரிமைக்காகக் கதறும்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளும் கூட உண்மையைப் பேச முடியாத ஒரு உணர்வுப்பூர்வமானச் சூழல் இங்கு உருவாக்கப்படும். இத்தகைய வீர,தீர செயல் புரிந்து நாட்டுக்காக தன்னுயிரை விட்ட, இந்தத் தமிழர்களுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் என நிவாரண உதவிகள் வழங்கப் படும்.

படுகொலைச் செய்யப்பட்ட இந்த மாவீரர்கள் அவரவர் கைகளில் கோடாரியைப் பிடித்தபடியான சிலைகளை, அவரவர் கிராமங்களின் நுழைவாயில்களில் நிறுவி, அதை அமைச்சர்களும், ஆட்சித் தலைவர்களும் திறந்து வைக்காதவரை, இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நியாயம் என்று ஒன்று ஒளிந்து கொண்டாவது இருக்கும்.


-எஸ்கேபி. கருணா

நமது  செய்தித தாட்களுக்கும் கூட மக்களிடம் உண்மையைக் சொல்வதிற்குப் பதிலாக , 'இதை ஒரு சென்சேஷனல் ' நியூஸாகத்தான் பார்க்கிறார்கள் .  அன்றைய வியாபாரத்திற்கு ஒரு பரபரப்பு. மேலும் எல்லாவற்றிலும் ஜாதி-மத-இன தூண்டி விடுவதற்கென்றே செயல்படும் சில  தமிழக கோஷ்டிகளுக்கு  பஞ்சமில்லை. 



Monday, April 6, 2015

ஸ்ரீ கந்தாஸ்ரமம்

ஸ்ரீ கந்தாஸ்ரமம், சேலம் நகரின் அருகே உள்ள உடையா(ர்)பட்டி என்ற இடத்திற்கு அருகில், ஒரு குன்றின் மேல் உள்ள தலம்.

1970-71 –ல் ஒரு முறை, இந்த கோயிலுக்கு சென்று வந்ததாக நினைவு. படிக்கட்டுகளும், ஒரு சிறிய முருகன் கோயிலும் தான் நினைவில் இருக்கிறது.

பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள், இந்த கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அந்த காலத்திய பழைய சாலையினை நினைவில் கொண்டு சென்றதால் கோயிலுக்கு செல்வதே சிரமமாகிவிட்டது. நான்கு வழி சாலை அமைப்புக்கும் பின் இடமே புரியவில்லை.

இந்த கோயிலுக்கான அணுகுச் சாலையை ஒளித்து வைத்திருக்கிறார்கள். எனவே, இத்தலத்திற்கு செல்வோர், சேலத்திலிருந்து ஆத்தூர் சாலையை அடைந்து, விசாரித்துக் கொள்ளுங்கள்

இந்த ஆஸ்ரமம் ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது. இப்பொழுது பிரமாண்டமாய் கட்டியுள்ளனர். ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் அதிஷ்டானத்திற்கு பின்புறம் அம்பாள்-பார்வதி. நேர் எதிரே முருகப் பெருமான். தாயைப் பார்த்த வண்ணமிருக்கும் முருகன்.

நாங்கள் சென்றிருந்த சமயம், வேலவன் விபூதி அலங்காரத்தில் இருந்தார். வெகு நேர்த்தியாக இருந்தது. முருகப் பெருமானின் சன்னிதியைச் சுற்றிலும் நவக்கிரகங்கள், தத்தமது துணைவியருடன்.

அதிஷ்டானத்தின் இடது புறமும் வலது புறமும் நான்கு வேத மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பார்க்காத, ஏன் கேள்விப்படாத சன்னிதிகள், இவை. உடன் வியாஸர்.

வெளியே 16 அடி உயர தத்ராத்ரேய பகவான், சொர்ண ஆகர்ஷண பைரவர், ஆஞ்சனேயர், இடும்பன், சங்கட ஹர கணபதி ஆகியோரின் சன்னதிகளும் பெரியதாக இருக்கின்றன. 

யஜுர்வேத பாடசாலையும், கோசாலையும் இருக்கின்றன. விரும்பினால் பாடசாலைக்கும் கோசாலைக்கும் காணிக்கை செலுத்தலாம்.

மிக அருமையான ஆன்மீக புத்தகங்கள், நுட்பமான வேலைப் பாடுகள் நிறைந்த கடவுளர்களின் வெண்கல-பித்தளை சிற்பங்கள், துளசி-ருத்ராட்ச மணி மாலைகள், ஒலி-ஒளி வட்டுக்கள், பூஜைக்குறிய பொருட்கள், ஹோம ரக்ஷை போன்றவை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

மூர்த்தங்களுக்கு அர்ச்சனை,அபிஷேகம் இல்லை. தீபாரதனை மட்டும்தான். தட்டில் ‘தட்சிணை’ போடக்கூடாது’ என எழுதியே வைத்து விட்டனர்.

எவ்வளவாக இருந்தாலும், விரும்பினால் மட்டும் டொனேஷன் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். ஹுண்டி கிடையாது. 

எனக்கு, சீக்கிய பொற்கோயில் தான் நினைவுக்கு வந்தது. அங்கே ஒரு ரூபாய் செலுத்தினாலும் ரசீது தருவார்கள்.


உடன் வந்த எனது நன்பர் செந்தில் மிகவும் நெகிழ்ச்சியுற்று, இங்கே வந்து ஒரு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வளவு அமைதியான, உள்ளே நுழைந்த வுடனே ஆன்மீக உணர்வு மேலிட்டு-மனம் ஒன்றுபடும் இடம். 

சமயம் கிடைத்தால் சென்று வாருங்கள். 

வெளி முகப்பு 

இடும்பன் 

தத்தாத்ரேயர் 


கோயிலின் 
உட்புறம் 


செந்தில் - நான் - இராமநாதன் 

இதே நாளில் நாங்கள் சென்ற பிற கோயில்கள் 

1. Thaaramangalam - Kailasanathar2. 1008 - Sivalangam Temple Salem3. Vada Chenni Malai - Murugan4.    Chinna Thirupathi


Saturday, April 4, 2015

தாரமங்கலம்-கைலாசநாதர்

 சின்ன திருப்பதி செல்ல வேண்டும் என்ற விழைவு வந்த உடன், சேலம் அருகில் வேறு ஏதேனும் பிரசித்தி பெற்ற கோயில் இருக்கிறதா என கூகிளாண்டவரை வினவ, அவர் அருளிய மற்றுமொரு தலம் தாரமங்கலம்.

தமிழகத்தில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்ற கோயில்களில் ஒன்று “தாரமங்கலம் கைலாசனாதர் கோயில்”.

பதிமூன்றாம் நூற்றண்டைச் சேர்ந்த கோயில். இந்த கோயிலின் கற்களே வித்தியாசமாக இருக்கிறது. (கூழாங்கல் மாதிரி).

மேற்கு நோக்கிய கோயில். மாசிமாதம் 9,10,11 ஆகிய தேதிகளில் மட்டும், சூரிய கதிர்கள் நந்தியின் கொம்புகளுக்கிடையே விழுமாம்; ஓளியின் பிரதிபலிப்பு ஒரு ‘பிறை’ போல மூலவரின் மீது படுமாம்.  இத்தகைய கோயில் பல இருந்தாலும், நந்தியின் கொம்புகளுக்கிடையே சூரிய ஒளி விழுவது நான் கேள்விப் படாத ஒன்று.

மதியம் ஒரு மணிக்கு, நாங்கள் கோயிலினுள் நுழையும் பொழுதே,  நடை சாத்தத் துவங்கி விட்டனர். எனவே அரைகுறையாகத்தான்  காண முடிந்தது.

சிற்ப ஆர்வலர்கள் காண வேண்டிய தலம்.




















1008 .சிவலிங்கம் - சேலம் கோயில்.

ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான கோயில் நிறைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களை உத்தேசித்து, நவீன பாணியில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிர்லா கோயில்கள் என பொதுவாக அழைக்கப்படும் நவீன, கம்பீரமான, பிரம்மாண்டமான கோயில்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

‘பிர்லா குடும்பத்தாரால்’ மிக அழகாக, நமது பண்பாட்டின் தொடர்ச்சியாக இந்தியாவெங்கும் இத்தகைய கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இத்தகைய கோயில்கள், நகரின் லேண்ட் மார்க்காகக் கூட கருதப் படுகின்றன.

இப்பாணியில், தமிழகத்திலும் கூட பல நவீன கோயில்கள் கட்டப் பட்டுள்ளன. அத்தகைய கோயில்களில் ஒன்று, சேலத்தில் உள்ள 1008 சிவலிங்கம் கோயில். சேலம் வினாயகா மிஷன் நிறுவனத்தால், அவர்களது நிறுவனத்தின் அருகிலேயே, ஒரு சிறிய குன்றின்மேல், சேலம்-சங்ககிரி சாலையில் அமைக்கப் பட்டுள்ளது, இந்தச்  சிவலிங்கங்கள்.

1008 என்றால், நிஜமாகவே 1008! ஆவுடையோடு கூடிய சிவலிங்கங்கள்! 

எதிரே ஒரே மாதிரியான அளவில் 1008 நந்திகள். 1008 மண்டபங்கள். மலையின் அடிவாரத்தில் ஆரம்பித்து உச்சியில் முடியும் பொழுது 1008 வந்து விடுகிறது.

அடிவாரம் முதல் உச்சி வரை, சிவலிங்கங்களை தரிசித்தபடியே வாகனத்திலேயே பயணிக்கலாம்தான். இருந்தாலும், நேரம் இருந்தால், சிவனின் ஆயிரம் நாமாக்களை உச்சரித்தவண்ணம், ஒவ்வொரு சிவலிங்கத்தினையும் தரிசித்த வண்ணம் மேலே செல்லலாம்.

பின்னனியில் பச்சைப் பசேல் என்ற மலைகளும், சரிவுகளும் அழகும் அமைதியும் தரவல்லன.

1008 லிங்கங்கள் மட்டுமல்ல; ஐயப்பன் சன்னிதி, அறுபடைவீடுகளின் பிரதிகளாக மூர்த்தங்கள் (சிற்பங்கள்), ஆஞ்சனேயர், ராமர் பட்டாபிஷேக சிற்பங்கள், ராஜ ராஜேஸ்வரி, மஹாலக்ஷ்மி, பெருமாள் என கண்ணைக் கவரும் கோயில்கள் யாவும் வெகு சுத்தமாக, அற்புதமாக அமைத்தது மட்டுமல்லாமல், அதை அப்படியே நிர்வகித்தும் வருகிறார்கள்.

1008 லிங்கங்களையும், பிரம்மாண்டமான மற்ற கோயில்களையும் பராமரிப்பது சாமாண்ய காரியமா என்ன? அதுவும் மலைச் சரிவில்!!

எல்லாவற்றிகும் உச்சமாக, உமையாம்பிகை சமேத, அருணாசல சுந்தரேஸ்வர் மூர்த்தமும் அழகும் பிரமிக்க வைக்கும். பேரழகு!

இந்த சிவலிங்கம் பதினேழு அடி உயரம்! இந்த கோயில், உங்களை நிச்சயம் மலைக்கவைக்கும்!


சேலம் செல்லும் பொழுது, இக்கோயிலையும் பாருங்கள்!



அடிவாரத்தில், முதலில் வரவேற்பதே வினாயகர்தான்.



நண்பர் எஸ். ராமநாதனுடன் 




.அஹா. காணக் கண்ணும் கூட 1008 வேண்டும்;



நண்பர் செந்தில் ...


அறுபடை வீடு ரிப்ளிகா 

அறுபடை வீடு ரிப்ளிகா 

அறுபடை வீடு ரிப்ளிகா 

அருணாசலேஸ்வரர் கோயில் முகப்பு 

அருணாச்சலேஸ்வரர் 

1008- இன்னொரு கோணம் 



உமையாம்பிகை 


சரணம் ஐயப்பா...

ஸ்ரீ   ராமர் பட்டாபிஷேகக் காட்சி.  நேரில்  இன்னும் அழகு 



You cannot ask for More...


ஆரம்பம் 




பின்னணியில்..


Friday, April 3, 2015

வட சென்னிமலை

வட சென்னிமலை

ஆத்தூருக்கு (சேலம்-ஆத்தூர்) அருகில் உள்ள காட்டுக்கொட்டகை என்ற கிராமத்தின் அருகே அமைந்துள்ளது ‘வட சென்னிமலை’  "பாலசுப்ரமணியர் முருகன் ஆலயம். கோயில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் முதிர்ந்தது என்றும் சொல்லுகிறார்கள். முருகன் தண்டாயுதபாணியாகவும், சிறுவனாகவும், தம்பதி சமேதராகவும் என மூன்று வடிவங்களில் காட்சி தருகிறார்.

சிறு பிராயத்தில் ஆத்தூருடன் எனது உறவு அதிகமானது. பள்ளிப் படிப்பு கூட ஆத்தூரை ஒட்டியே!

அந்த காலத்தில் (1960 கள்), பங்குனி உத்திரத்தின் பொழுது இரண்டொரு முறை இந்த கோயிலுக்கு சென்று வந்துள்ளேன். அப்பொழுது ஒரே சன்னிதி, ‘பால சுப்ரமணியர்’ மட்டுமே! 

எனதாருயிர் நன்பர் ‘செந்தில்’ அவர்களின் விருப்பப்படி, 02/04/15 அன்று  மீண்டும் அந்த சிறு குன்றிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 1960-களில் மேலே செல்லுவதற்கு சரியான படிகள் கூட இல்லை. நிஜமாகவே “கல்லும்-முள்ளும் காலுக்கு மெத்தை” தான். மிகச் சிறிய கோயில். 1968-ல் எனது தாய்வழிப் பாட்டி ‘சிவகாமு அம்மாள்’ குச்சியை ஊன்றிக் கொண்டு, முருகா என கோஷித்த வண்ணம், தனது எழுபதாவது வயதில்,  மலையேறியது நினைவிருக்கிறது. ஏன்...பக்தர்களின் ‘அரோகரா..’ கோஷம் கூட காதில் இன்னமும் ஒலிக்கிறது.

தற்பொழுது, பெரியதாக விஸ்தாரமாக கோயில் கட்டி உள்ளனர். ராஜ கோபுரம் உட்பட.. மேல் வரை கார் செல்லலாம். வாட்டமான படிக்கட்டுகள்.

பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் அல்லவா? சர்வ அலங்காரத்துடன் முருகன் காட்சியளித்தார். முருகு என்றாலே அழகுதானே?

கொளுத்தும் வெய்யிலில், கற்களைப் பிடித்துக்கொண்டு, குச்சி ஐஸ் சப்பிக் கொண்டு, முருகா..முருகா என முழங்கிய வண்ணம், தரிசனம் செய்த பொழுது கிடைத்த ஒரு குதூகலம், காலம் வளர்ந்து-வயது தேய்ந்து, சொகுசாக மேல் வரை காரில் செல்லும் பொழுது கிடைத்ததா எனச் சொல்லத் தெரியவில்லை...

வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள். அழகான கோயில். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமல்லவா?






சின்னத் திருப்பதி


ஓமலூர் அருகே உள்ள தலம், ‘சின்னத் திருப்பதி’.

சேலத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. முலவர் ப்ரஸன்ன வெங்கட்ரமணர். ஸ்ரீதேவி-பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

மூலவர் ஸ்வய்ம்பூ என்கிறார்கள். நின்ற நிலைப் பெருமாள்.

நாங்கள் சென்ற சமயம் மதியம் மணி இரண்டு. நடை சாத்தியிருந்தது. அழகான கோயில், ஒரு கரட்டின் (சிறிய குன்று) மேல் அமைந்துள்ளது. 

இங்குள்ள சுற்றுவட்டார மக்கள் தங்களது எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் அவற்றை வெங்கட்ரமணரிடம் சமர்ப்பித்து, அனுமதி பெற்று வழிபடுவதை வழக்கமாகக்  கொண்டிருக்கிறார்களாம். இதற்காகவே சிறு பொட்டலங்களில் துளசி-குங்குமத்தை வைத்திருக்கிறார்கள்.

பட்டாச்சார்யார் மூன்று மணிக்கு நடை திறந்துவிட்டார். மூலவர் ப்ரஸன்ன வெங்கட்ரமணர், சற்றே தலை சாய்த்த வண்ணம் இருக்கிறார். அழகான திருமேனி! பெருமாள் அலங்காரப் பிரியாரான அல்லவா? இங்கும் அப்படியே! 

உற்சவர் மின்னுகிறார். 

பட்டார் நிதானமாக அர்ச்சனை செய்வித்தார்.

தல வரலாறு: திருப்பதி வெங்கடேசப் பெருமாள் குளிப்பதற்காக வெளியே வந்தாராம். அவருக்கு உதவி ஸ்ரீதேவி அங்கே இல்லை. எனவே அரப்புப் பொடியினைத்தேடி வந்தவர் இந்த குன்றில் அரப்புச் செடிகளைக் கண்டதும் இங்கேயே தங்கிவிட்டாராம். இதனை ஸ்தல புராணமாகச் சொல்லுகிறார்கள்.

தாயார் சன்னதி தனியாக இருக்கிறது. அவரும் அலங்காரப் ப்ரியை போலும். அழகு!

நாங்கள் சென்ற வேளையில், அங்கே சரியான உணவு கிடைக்க வில்லை. 

ஒரு இளனீரைக் குடித்துவிட்டு, பசியை மறந்து தரிசனம் செய்யக் காத்திருந்தோம்.  அங்கே, எங்களைப் போலவே, தரிசனத்திற்கு காத்திருந்த ஒரு பக்த குடும்பம் ஒன்று, கோயிலிலேயே, அன்புடன் சுவையான தேனீர் தயாரித்து வழங்கினார்கள்.  கனிவான வார்த்தைகளுடன்.


அட.. இன்னமும் சிலரிடம் அன்பும் விருந்தோம்பலும் இருக்கத்தான் செய்கிறது.