Sunday, April 6, 2014

குக்கர்

அது ஒரு, ஒரு இரண்டு லிட்டர் குக்கர். சமையல் அறையின் மேல் தட்டில் இருந்தது.  அது, ஒரு மாத காலமாக கடுமையான கோபத்தில் இருக்கிறது. 

இருக்காதா பின்னே? ஒவ்வொருமுறை குக்கரை எடுக்கும் பொழுதும்,
ஷைலஜா, வருக்-வருக் கென சுரண்டுகிறாள். டொம்..டொம். என வைக்கிறாள். நாசூக்காக கையாள வேண்டாம்?  தண்ணீர் குறைவாக வைத்து சாதத்தைத்  தீய விடுகிறாள். இல்லாவிடில் அதிகமாக தண்ணீர் வைத்து, வெயிட் வழியே, கஞ்சியை வழிய விடுகிறாள். குக்கருக்கு வலிக்கிறது போலும்! அதைவிட ஷலஜா பண்ணும் சேட்டை, குக்கருக்கு, தலவலியை உண்டு பண்ணுகிறது.

அன்றும் அதேபோல குக்கரை எடுத்து வரும்பொழுது ‘பொதேர்’ என கீழே போட்டாள்.

குக்கருக்கு பொறுக்கவில்லை?

‘ஏய் பெண்ணே! உனக்கு நிதானமாக வேலை செய்யத் தெரியாது?

‘அட, குக்கர்....  நீ பேசுவியா?’

‘பேசுவேன்.’

‘ஆச்சர்யமாய் இருக்கிறது!’

‘என் கேள்விக்கெங்கே பதில்...’

‘என்ன கேள்வி..?’

‘என்னை ஏன் நிதானமாக கையாளாமல், போட்டு உடைக்கிறாய்...?’

‘அப்படியா..?  எனக்கு சமைக்கத் தெரியாது! இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்..’

‘தெரியாதா..? இது நாள்வரை வேறு ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்தாளே..? அது யார்..?’

‘அது என் அம்மா?’

‘ஓ... அவர் எங்கே?’

‘அவர் இனி வரமாட்டார்’

‘ஏன்..?’

‘அவர் இறந்து போய்விட்டார்’.

‘இறந்து போதல் என்றால் என்ன?’

‘அப்படி ஒரு ஆள் இல்லாமலேயே போய்விடுவது..’

‘இனிமேல் அவர்களை பார்க்க முடியாதா?’

‘ஆம்.. முடியவே முடியாது.! ஆனால், அப்பாவும், என் தம்பியும் சாப்பிட்டாக வேண்டுமல்லவா? உயிருடன் இருக்கும் வரை எதை நிறுத்த முடிகிறது? அதனால்தான் நானே சமைக்கிறேன்!ஆனால் எனக்கு சமைக்கவே பிடிக்கவில்லை!’ எரிச்சலாக இருக்கிறது.'

'சமைக்கும்பொழுது ஆத்திரப்படாதே! அது சரி...
இறந்து போதல், உன் அம்மாவுக்கு மட்டும் தான் வருமா  இல்லை எல்லோருக்குமா?’

‘எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியது தான். நான், என் அப்பா, என் தம்பி... எல்லோருமே!’

“ஓ....நான் கூட சாவேனா?’

‘குக்கரா? அது எனக்குத் தெரியாது...ஆனால் நீயும் ஒரு நாள் கெட்டுப் போவாய்.’

‘அப்பொழுது, என்னை, என்ன செய்வீர்கள்?’

‘உன்னை பழைய பாத்திரக் கடையில், போட்டுவிடுவோம்.. ’

‘அப்புறம்?’

‘அவர்கள், உன்னை நசுக்கி சப்பையாக்குவார்கள். பின்பு உன்னை உருக்கி, 
வேறு ஒரு பொருளாக மாற்றிவிடுவார்கள்..’

‘வேறு ஒரு பொருள் என்றால்?’

‘கரண்டி, குண்டான் இது போல.. சில சமயம் ஆபீஸ் பொருளாகக் கூட மாறக்கூடும்..’

‘அப்படி மாறிய;பின், நான் பழைய குக்கர் என்பது எனக்குத் தெரியுமா?’

‘தெரியாது.. அப்பொழுது என்ன பொருளோ அதுவாகத்தான் நினைத்துக் கொள்வாய்.’

‘உன் அம்மாவும் இப்பொ வேற ஒரு ஆளா மாறியிருப்பாங்களா?’

‘தெரியாது.. ‘

‘தெரியாதா?  நான் என்ன அவேன் என்று தெளிவாகச் சொல்கிறாயே? ஏன் உன் அம்மாவைப் பற்றி சொல்ல முடியாது..?’

‘நானே செத்துப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்.. ஆனா செத்துப் போனபின், நான் ஷலஜா என்பவள் இல்லை என்பது மட்டும் தெரியும்.. ஏனெனில், அது இந்த உடலின் பெயர். உனக்கு குக்கர் என்று  பெயர் இருப்பது போல..’

‘அப்ப நான் குக்கர் இல்லையா?’

‘இல்லை!’

‘பின் நான் யார்?’

‘அலுமினியம் தான்.  இன்னும் உள்ளே..உள்ளே.. போய்ப் பார்த்தால், நீ வெறும் அணுத் துகள்..’

‘அப்ப உன் அம்மா என்பது உன் அம்மாவின் உடலோட பெயரா?’

‘நீ அதிகம் பேசுகிறாய்..’

‘பரவாயில்லை.. தெரிஞ்சுக்கறேன், சொல்லு’

‘அப்படித்தான் தெரிகிறது.’

‘நான் குக்கர் அல்ல, அலுமினியம் அல்லது வேறு ஏதோ உலோகம் என்பது போல உன் அம்மா உண்மையில் யார்..?’

‘தெரியாது... ஆன்மா என்று சொல்கிறார்கள்.’

‘நீ ஆன்மா என்பது உனக்குத் தெரியாதா? ஆச்சரியமாய் இருக்கிறது!’

‘ஷலஜாவாக இருக்கும் வரை, ஆன்மாவாக இருக்க முடியாது?’

‘அது எப்படி? நான் அலுமினியம்தான் , குக்கர் இல்லை என்பது எனக்கு தெரிகிறதே?’

‘நீ நசுக்கப்படும் வரை, நீ குக்கர் தானே?’

‘ஆமாம்..’

‘அது போலத்தான். ஷலஜாவாக இருக்கும் வரை ஷலஜாதான்.’

‘குழப்புகிறாய்.. நீ அன்மா என்பது எப்பொழு உனக்குப் புரியும்?’

‘உனக்கு நான் சொன்ன மாதிரி, எனக்கு யாராவது, நீ ஷலஜா அல்ல என்று  சொல்ல வேண்டும். ஞானம் அடைய வைக்க வேண்டும்..’

‘யார் சொல்ல வேண்டும்?’

‘தெரியாது! ஆனால் அவரை ‘குரு’ என்று அழைப்பார்கள்.

‘உனக்கு இதுவரை யாரும் குரு கிடையாதா?’

‘இல்லை என்றுதான் நினைக்கிறேன். உண்மையாக, நேர்மையாக நான் குருவை விரும்பி இருந்தால், இன்னேரம் குருவும் என்னைத் தேடி வந்திருப்பார், அல்லது நான் குருவைக் கண்டிபிடித்திருப்பேன்..’

‘வேண்டாம்.. நீ பேசுவது ஒன்றும் விளங்கவில்லை..’

‘எனக்கெ சரியாகத் தெரியவில்லை..!’

‘அது இருக்கட்டும்.. நீதான் எல்லோருக்கும் சமைக்கிறாயா?’

‘ஆமாம் சமைத்துவிட்டு, காலேஜ் போகனும். அப்பாவுக்கும், தம்பிக்கும் சேர்த்து செய்யணும். எனக்கு, சமைப்பதற்கு வரவேயில்லை. தெரியவில்லை!  நன்றாகவே இல்லை. போரகிறது. ஆனாலும் அப்பாவும், தம்பியும் ஒன்றும் சொல்லாமல் “நல்லா இருக்கேன்னு’ சொல்லி சாப்பிடறாங்க..பாவம்! '

‘உன்னைப் பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உன்மேல் எனக்கு அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறது..!’

‘குக்கருக்கு கூட அன்பு, பாசம் உண்டா?’

ம்ம்ம்ம்ம்’

‘ஷைலு கண்ணு... என்னடா செல்லம், இன்னிக்கு சாப்பாடு நல்ல டேஸ்டியா இருக்கு. வெரிகுட்ரா ..  என்றார் அப்பா

‘தேங்க்ஸ் அக்கா.. இன்னிக்கு அம்மா சமைச்ச மாதிரியே இருக்கு’ என்றான் தம்பி.

குக்கர் மௌனமாகச் சிரித்துக் கொண்டது.

  
(இது குறுங்கதை மாதிரி.. பொருள் சற்றே மறைந்திருக்கும்.)

Wednesday, April 2, 2014

பெண்குழந்தைள் பேரழகு!

மகன் என்னும் உறவு மகனுக்கு திருமணம் ஆகும் வரை!
மகள் என்னும் உறவு வாழ்வின் இறுதிவரை!
                               -நெட்டில் படித்த்து!

புது தில்லியில் என்னுடைய ஃபேஸ்புக்  நண்பி ஒருவர்.
எடித்த எடுப்பில் ‘அப்பா’ என வாஞ்சையோடு அழைத்தவர். எனது பிளாக்கில் (orbekv.blogspot.in)  நான் எழுதும் சில புலம்பல்களைப் படித்துவிட்டு, ஆறுதல் கூறியவர். நல்ல கவிஞர். தமிழில் ஆர்வம் மிகுந்தவர். புத்திசாலி. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து பகிர்ந்து கொள்பவர்.

தமிழில் ஆர்வம்,
மனித நேயம்,
பெரியவர்களின் மதித்தல்,
மரபுகளைக் காத்தல்,
தமிழ்க் கலாச்சாரத்தை வளர்த்தல்,
வார்த்தைகளில் கண்ணியம்

-என பல பரிமாணங்களை உள்ளடக்கியவர்.

இவ்வளவுக்கும் அவரை  நேரில் சந்தித்ததில்லை. எனது மகளைவிடச் சிறியவர். மனதால் பெண்குழந்தைகள் பேரழகுதான்.

அவர் எனது மனைவியின் மறைவு குறித்து, எனது நோக்கில் ஒரு கவிதை எழுதி அனுப்பியிருந்தார். அவரது அனுமதியின்றி பெயரைக் குறிப்பிடுவதும், முகநூல் விலாசத்தைச் சொல்வதும் முறையாகாது என்பதால், அவரது கவிதையினை மட்டும் வெளியிடுகின்றேன். அந்த தமிழ்ப்புதல்வி நீண்ட ஆயுளோடும், அரோக்கியத்தோடும், நலமாக வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன், ஆசீர்வதிக்கிறேன்.

கவிதை வரிகள் உன்னதமாயிருக்கின்றன. தமிழில் அவருக்கு இருக்கும் புலமையை கோடிட்டிக் காட்டுமின்றன. முதல் கவிதை கிளாசிக். 
உ-ம்: முதல் கவிதையில் மனகுதிரை மேய்ச்சல், பந்தயக் குதிரை, புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் குரல்  போன்றவை.

இரண்டாவது உணர்ச்சிக் குவியல். 
திலும் இரண்டாவது கவிதையின் ஐந்து முதல் எட்டாவது வரிவரை என் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அற்புதம்!.





இனி அவரது கவிதை!
---------------------------------------

1.       காற்றோடு பேசிய உன் நினைவுகள்.
கொஞ்சம் கொஞ்சமாய் பகல் தனது
வலிமையை இழந்து கொண்டிருக்க,
நெடிய இரவு நீர் கப்பிய மேகங்களின்
ஊடாக  மரங்களில் இறங்கிக் கொண்டிருந்தது தொலைவில்.

மன குதிரைகள் மெல்ல நகர்ந்தபடி
மேய்ச்சலில் இருந்தன.
சாளரங்களின் வழியாக சலனமின்றி
என்னையே நோட்டமிடும்போது இடையில்
குறுக்கும் நெடுக்குமாய் உன் நினைவுகள்,
பந்தய குதிரைபோல் பாய்ந்து ஓடின .

என் மனமானது அவசரம் இன்றி
ஒரு புதிய பாணியில் இயங்கிக் கொண்டிருந்தது,
கண்களில் கனவு, விழி திடலில் நீ
..... அரேபியக் குதிரையின் சுக்கானைப் பிடித்தபடி

தொடுவானத்தில் நின்று ஒரு முறை
தகிப்பாய் இரவின் சுவடுகளை நோட்டமிட்ட
கதிரவன் மெல்ல மெல்ல மறையத் துவங்கியிருந்தான்.
உன்னில் என் நினைவுகளை போல .........
விழி நீர் வழிந்திரங்க,
உப்பு நீர் உள்ளிரங்க,
துடைக்க உன் விரலன்றி காய்ந்தது கண்ணீர்.
 சலனமற்ற என்னில் விவரிக்க முடியாத நேசமும்,
ஏமாற்றமும் தொக்கிக் கிடந்தது.

மனம் மெளனித்து இருக்க,
உதடுகள் உன் பெயரை சொல்லி புலம்பி அழுகின்றன
புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் குரல்
இப்படித்தான் காற்றில் எங்காவது கேட்பாரற்றுச் சுற்றி அலைகிறது.

உன் நினைவுகள் திரும்பிய பக்கமெல்லாம்
காற்றைப் போல நிரம்பிக் கிடக்கிறது,
துயரமும், வலியும் நிரம்பிய என்னை
ஒரு புரியாத புதிர் வட்டத்துக்குள் தள்ளியது ஏன் ?
நன் சுமந்த உன் நினைவுகள்
 கேட்பாரற்றுக் கரைந்து கொண்டிருக்க
இயலாமை நிரம்பிய சொற்களை
காற்றோடு பேசியபடி என் மனக்குதிரை கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுக்கத் துவங்கியது.

கிணற்றுக்குள் நீண்டு தொங்கிக் கிடக்கிற
வாளிக் கயிற்றை எடுப்பது போல்
உன்னைச் சுற்றித் திரிகிற மனம் என்கிற
எனது நீட்சியை லாவகமாக எடுத்துச்
சுற்றிவிட்டு உறங்க துவங்கினேன்.
என் உறங்காத விழிகளோடு.

2.தாளாத துயரம்

கூப்பிட்ட குரலுக்கு என் முன்னே நின்றவளே!
கூப்பாடு போட்டு குழந்தை போல் பிதற்றுகிறேன்!
தள்ளாடி தரைமீது விழுந்து புரளுகிரேன்!
எங்கு போனாயோ,எப்போ நீ வருவாயோ
என் கண்ணீரும் வேதனையும்
என் பலவீனதின் சுவடு அல்ல
உன் பேரிழப்பு தந்த பெரும் பரிசு
நான் சுமக்க முடியாமற் சுமந்து நிற்கும் வேதனை பரிசு

என் இளமைக்கும் முதுமைக்கும்
இடையில் வந்த ஓர் அற்புதமான பினைப்பு நீ
என் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திற்கும் அர்த்தம்
தேடித்தந்த அகராதி நீ!

புழக்கடை முற்றம் புறக்கணித்து கிடக்க
கோலமிட குனிவாய்யென தெருவாசல் காத்திருக்கு !

கிழிக்காத தேதியும் கிழியாத சேலையும்
ஏற்றாத தீபமும்,தூற்றாத அறைகளும்
உனக்காக காத்திருந்து

என்னில் உன் நினைவை தூர்வாரி
சுறக்கச் செய்கிறது.

கண்களில் வழியும் நீரை துடைத்தெறிந்தே
கைகள் சோர்வில் துவண்டன.
பால்கணக்கு கோடுகளை

அடுப்படிச் சுவர் தாங்கி நிற்க............
உன் சிருவாட்டு சில்லரையோ
என் நெஞ்சத்தை பொல் சிதறுதடி.
உன் தோலிருந்த கைபையில்
மடித்திருந்த குங்குமமும்
 குட்டி நிலா வெட்டி போட்ட
நகவெட்டி சாவிக்கொத்தும்
உனக்காக காத்திருந்து.............. உன்னறையில் ஏங்குதடி
என்னுடன் நீ இருந்த
பொழுதுகளெல்லாம் பூமகள்
உனை போன்றே பூத்துகுலுங்கின
இன்றோ வண்ணம் தொலைத்த பாலை
நிலத்து  பாதைதனில் என்னை விடுத்து
எங்கோ மறைந்தாய்

நீ பேசிய பொழுதெல்லாம் உன் வார்த்தையை
மறுத்த நானே............... என் தவறு திருத்தி
இப்பொழுதெல்லாம் நிறைய பேசுகிறேன்
உன்னுடன்,கேட்க நீ இல்லை.....மீண்டும் பேசுகிறேன்

விதியத்து போணவன் நான்
வீதியில் நடந்து வர உதிர்த்தன
சருகுகளை தெருவோர மரங்களெல்லாம்
எதிர் காற்றில் தல்லாடி விழுந்தவன் என் முன்னால் நீ இருந்தாய்.............வெரும் பிம்பமாய்
உன் மரணத்திற்கு முன்னுரை எழுத
உனக்குமுதுமையும், நோயும் வந்தனவோ வரிசை கட்டி?

என் வாழ்வின் இறுதிக்கட்டம் சோகத்தில் மூழ்கடிக்க.
உயிரே வருவேன் காத்திரு,
காற்றோடு கலந்த உன்னை என் மூச்சுக்காற்று

தொலைத்தேனும் உன்னில் எனை கரைக்க வருவேன் காத்திரு..........................