Friday, September 9, 2011

இறக்கும் நிலையில் இந்திய தந்தி


இன்று அலுவலகப் பணி நிமித்தமாக தொலைவில் உள்ள ஒரு தந்தி அலுவலகத்திற்கு சென்று வர நேர்ந்தது. உள்ளே சென்றால் பொதுமக்கள் யவருமில்லை.  கவுண்டரின் (Counter) உள்ளே, ஒரே ஒருவர் இருந்தார்.  அவரும் கூட தந்தி சம்பந்தமான வேலை ஏதும் செய்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அவருக்கு இடப்பட்ட வேறு ஏதோ ஒரு பணியினைச் செய்து கொண்டிருந்தார். 

டெலகிராஃபிஸ்ட் என அழைக்கபட்டுக் கொண்டிருந்த அந்த அலுவலக பணியாளர், ‘மோர்ஸ் கோட்' அடிப்பதில் பயிற்சி பெற்றவர். எதற்காக பணியில் சேர்க்கப்பட்டாரோ, எதில் பயிற்சி பெற்றாரோ அந்த களத்திலிருந்து வேருடன் பிடுங்கப் பட்டு, சம்பந்தமே இல்லாத வேறு ஒரு பணியினை மேற் கொண்டிருந்தார்.


நினைவுகளை கொஞ்சம் ‘ரிவைண்ட் செய்து பார்த்தேன். அது, தொலைதொடர்புத்துறையின் ‘கற்காலம்.  செய்தி தொடர்புகளுக்கு ‘தபால்–தந்தி இலாக்கா மட்டுமே பொறுப்பேற்றிருந்த நேரம். தற்போதைய  “தொலைதொடர்பு இலாக்கா கூட ‘தபால்-தந்தி இலாக்காவில்  அடக்கம். பின்னர் தான் "தபால் தந்தி" யிலிருந்து ‘தொலை தொடர்பு தனியாக பிரிந்தது. அக்காலத்தில் சாதாரனர்களுக்கான கம்யூனிகேஷஷேன் ‘தபால் தான். அவசரமென்றால் தந்தி.

‘சார்... போஸ்ட்.. என்ற சப்தம், அக்காலத்தில் பலருக்கும்  தேனாக இனித்த  குரல். சொந்த-பந்தங்களிடமிருந்தோ, அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளுக்காகவோ, காத்திருந்து, கடிதங்களைப் பெற்றுச் செல்வது வழக்கம்.  காலை பத்து மணிக்கு, அனேகமாக எல்லா வீடுகளிலும் கேட்கும் செற்றொடர். “போஸ்ட் மேன் வந்துவிட்டு போய்விட்டாரா?” 

‘சார்... போஸ்ட்..என்ற பிரயோகத்தை பயன்படுத்தாத எழுத்தாளர்களே இல்லை என்று துணிந்து சொல்லிவிடலாம். அவ்வளவு பிரபலமான, தவிர்க்க இயலாத, ஒரு நைந்து போன வார்த்தை இது. 

தபால் அலுவலகங்களில், பிரதான இடத்தை தந்தி அலுவலகம் பெற்றிருக்கும். தபால் அலுவலகம், மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்டு விட்டாலும், தந்தி அலுவலகம் திறந்தே இருக்கும். தந்தி அனுப்புவதற்காக எப்போதும் கூட்டம் காத்திருக்கும். போஸ்ட் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் ‘லேட் ஃபீஸ் பெற்றுக் கொண்டு பணியாற்றும் அலுவலகர் பலர் இருந்தனர். 

உடணடியாக செய்தி போய்ச் சேரவேண்டும் எனில், அக்காலத்தில் தந்திதான் வழி. தந்தி மணியார்டகள் கூட உண்டு.  கிராமப் புரங்களுக்கு தந்திகளை கொண்டு சேர்ப்பதற்காக, ‘மெஸஞ்சர்கள் எல்லாம் உண்டு. (இந்தியா விடுதலை ஆவதற்கு முன்னால் இவர்களுக்கு ‘ரன்னர்கள் என்று பெயர். இந்த ரன்னர்களை  சட்டப்படியாகவே எவரும் வழியில் தடுத்து நிறுத்தக் கூடாது.  சுடுவதற்கு கூட அதிகாரம் பெற்றவர்)

அக்காலத்திய தந்தி அலுவலகங்கள் நினவுக்கு வந்தன.  எந்த நேரமும் ‘ஒரு ஃபாக்டரி போல இயங்கிக் கொண்டிருக்கும், இந்த சென்ட்ரல் டெலெகிராஃப் ஆபீஸ்கள். டெலெகிராஃபிஸ்ட்கள் மோர்ஸ் கருவிகளுக்கு முன் அமர்ந்து, அபார வேகத்தோடு, துல்லியமாக ‘கட..கட..கட்டுக் கட..என செய்திகளை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.  பெரிய சைஸ் டைப்ரைட்டர்களைப்போல இருக்கும் “டெலி பிரிண்டர்களும், டெலக்ஸ் களும் ஓயாமல் செய்திகளை வாங்கிக் கொண்டும், அனுப்பிக் கொண்டும் இருக்கும்.  உள்ளே போனாலே பிரமிப்பாக இருக்கும். வேலை செய்தால் இந்த மாதிரியான அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என எவருக்கும் தோன்றும்.

தந்தி அலுவலகத்தின், இன்னொரு பக்கம் ‘பொதுத் தொலைபேசி கள் இருக்கும்.  பெரிய அலுவலகங்களில் நான்கு ஐந்து பூத்கள் கூட இருக்கும்.  பிரசவ அரையின் முன் காத்திருக்கும் "கணவர்கள்" போல தனது ‘கால்கள் (டிரங்கால் கள்) வரும் வரை தவிப்போடு காத்திருப்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள், பாங்க் அலுவலகங்கள், வானிலை ரிபோர்ட்கள் என பலரிடமிருந்தும் தகவல்கள் பறந்து கொண்டிருக்கும்.  24 மணி நேரமும் பிஸியாக இருக்கும்.

“தகவல் தொழில்நுட்ப புரட்சி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்ட்து.  தபால் போய், ட்ரங்கால்கள் வந்து, அதுவும் போய், எஸ்.டி.டி வந்து, அதுவும் போய் செல்ஃபோன்கள் வந்து,  ‘செல்போனும் ஒரு கட்டைவிரலும் இருந்தால் ‘உலகமே உங்கள் கையில். செல்ஃபொன் இருந்தால், தந்தி அலுவலுகத்திற்கு மட்டுமல்ல, ‘பேங்க்குக் கூட போகத்தேவையில்லை. அனைத்தும் உங்கள் கட்டைவிரலில்.

பொதுமக்களுக்கும், சமுதாயத்திற்கும் நல்லதாகவே இருக்கும் இந்த தகவல் தொழில் நுட்ப புரட்சி, தந்தி அலுவலகத்தில் பணி புரிந்த ஆட்களுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்?  ‘P&T யில் உத்தரவாதமான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள், DOT –க்கு வந்து, பின் BSNL  ஆக மாறி, மத்திய அரசாங்கத்தின்  “தன் வீட்டுக் குழந்தையை தானே கழுத்தை நெரித்துக் கொல்லும் விந்தை கொள்கைகளின் காரணமாக, இந்த நிறுவனமும் (BSNL) நொடித்துப் போய், அபாயகரமான  நட்டங்களை சந்தித்துக் கொண்டு, அடுத்த வருடம் ‘சப்பளம் வருமா என கவலையுடன் இருக்கும் இந்த BSNL அலுவலகர்கள் நிலை பரிதாபமானது அல்லவா?.

‘டெலகிராஃபிஸ்ட்களின் விரல்கள் தாண்டவ மாடிய ‘மோர்ஸ் மிஷின்களும்’,  டெலி பிரிண்டர்களும், எஸ்.டி.டி மானிட்டர்களும் இப்போது எப்படி இருக்கின்றன என அறிய விழைந்தேன். அவை விருந்து முடிந்த பின்னர் அகற்றப்படாத மதுக் கோப்பைகள் போல கவனிக்கப்படாமல், சீண்டப்படாமல், இறைந்து  கிடந்தன.  

சார் எல்லாம் ‘ஸ்கிராப்பில்  (காயலான் கடை) போடப்பட்டுவிட்டது என்றார் அலுவலர்.  வேண்டுமானால் ஒன்று இருக்கிறது பாருங்கள் என்றார். மோர்ஸ் மெஷின். அதன் அருகே சென்று மெஷினில் அடித்தேன்..  கட கட..கட்.............. (நான் இறந்துவிட்டேன் என).  


இக்கால இளைஞர்கள் ‘டிரங்காலுக்காக காத்திருதேன், ‘தந்தி அனுப்பினேன் என்ற வாசங்களைக் கூட நம்ப மறுப்பார்கள்.


சார்.. தந்தி வருமானம் ஏதாவது வருகிறதா என வினவினேன்.

மிகவும் விரக்தியான  முகத்துடன், “இல்லை சார்.  தந்தி அனுப்புபவர்கள் எவருமிலர்.  சட்ட ரீதியாக (ரிகார்ட் purpose-க்காக) தந்தி அனுப்ப எப்போதாவது அத்தி பூத்தாற்போல சிலர் வருவார்கள் என்றார்.


‘அப்போது தந்தி அனுப்ப என்ன செய்வீர்கள்? மோர்ஸ் தான் காணாமற் போய் விட்டதே? என்றேன்.  Internet மூலமாக அனுப்போவோம் சார்.  என்றார்.


இந்த தடாலடி மாற்றங்கள், ஒரு வகையில், வாழ்க்கைத் தத்துவத்தை சொல்வது போல கூட இருந்த்து.


எனினும்,  150 வருடங்களுக்கு மேலாக,  இந்திய மக்களுக்கு சேவை செய்து ஓய்ந்து, அழுக்குடன் குப்பையில் கிடக்கும் மிஷின்கள் சற்று வேதனையைத் தந்தன.

கால ஓட்டத்தில், விஞ்ஞான மாற்றத்தின் விளைவாக, பல்வேறு தொழில்கள் காணாமற் போய்விட்டன. சுவற்றில் சித்திரம் மற்றும் விளம்பரம் வரைவோர், சைக்கிள் வாடகைக் கடை,  கை ரிக்ஷா,  அம்மி-ஆட்டுக்கல் செய்வோர், சுண்ணாம்பு செய்வோர் என பலரும் காணாமற் போய்விட்டனர். இவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?  வினவிப் பார்த்தேன். வாழ்க்கையின் நிர்பந்தங்கள் அவர்களை வேறு தொழிலுக்கு விரட்டி விட்டன.  தன்னை மாற்றிக் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவித்துக் கொண்டுள்ளனர். மாற முடியாதவர்கள்? எதோ ஒரு ஹோடேலிலோ அல்லது கோவில் வாசலிலோ இருக்கின்றனர்.  சிலர் கூலிக்கு வேலை செய்து கொண்டுள்ளனர்.




It would take years
and countless tears
to wash away all the hate
that we have slowly create
that was been stored in our hearts
we have been scattered in to parts
like worthless outdated money
and no matter what anybody
says there is no shame
in the way that we feel
we are all the same
we just learn to deal
never miss a chance to heal! 

what has been said and done
neglected and worn down(beyond repair) 
i try to escape and run(no one seemed to care) 
not allowed to utter a sound (im speachless) 
only loneliness to be found(feel so helpless) 
keep it all inside
the worst thing we could do
keep it in morse code so
i have died 
and can not cry
the pain we deny
i really should let it all go
wishing to the misty heavens
it would always show
and through pouring rain clouds
on to purple flower petals
so we both can be found
everthing can finely settle 

Wednesday, September 7, 2011

இன்னும் ஒரு குண்டு வெடித்தது!!

புது தில்லி, உயர்நீதிமன்ற வாசலில் ப்ரீப்கேஸில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் பலியாயினர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த குண்டு வெடிப்பு வழக்கை டெல்லி போலீசாரிடமிருந்து மாற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான National Investigation Agency வசம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.

இது தில்லி உயர் நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற இரண்டாவது சம்பவமாம். ஏற்கனவே கடந்த மே மாதம், 25ம் தேதி, டெல்லி உயர் நீதி மன்ற வளாகத்தில், சிறிய அளவிலான குண்டுவெடிப்பு நடந்ததுள்ளதாம். ஞாபகம் இருக்கிறதா?

தற்போது நடந்த குண்டு வெடிப்பில், பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம், நிவாரணமாக மாநில அரசு அளித்துள்ளதாம்!! அப்புறம் என்ன? அரசின் கடமை முடிந்துவிட்டது தானே?

ஒவ்வொரு முறையும் குண்டு வெடிக்கும் போது நமது அரசியல் வாதிகள், ரெடிமேடாக, எழுதி வைத்துக் கொண்டிருக்கும் ஆறுதல் உரைகளை நாமும் வரி விடாமல் படித்துக் கொண்டு, T.V சீரியல் பார்த்துக் கொண்டு, சொரணையற்று கேட்டுக் கொண்டிருப்போம்.

இம்மாதிரியான சமயங்களில் எல்லாம், நமது கையாலகாத, கேடுகெட்ட  அரசியல் வாதிகள் என்னவெல்லாம் சொல்லுவதை வழக்கமாக கொண் டிருக்கிறார்கள்?

1. நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சி அளிக்கிறது
2. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன்.
3. உயிர் இழந்தவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியையும், காய முற்ற 
    வர்கள் பூரண  குணம் அடைய வேண்டும் என விழைகிறேன். 
4.  இது ஒரு கோழைத்தனமான செயல்.
5.  தீவீர வாதிகளின் செயல்களுக்கு அடி பணிய மாட்டோம்.
6.  இது திட்டமிட்ட சதி.
7.  இப்படி ஒரு சம்பவம் நடக்கக்கூடும் என முன்பே எச்சரித்திருந்தோம்.
8.  குற்றவாளிகள் நீதிக்கு முன்னால் நிறுத்தப் படுவார்கள்.
9.  இதில் வெளி நாட்டு சதி இருக்கக் கூடும்.
10. எதிர்க்கட்சியினர் இதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதைத் தவிர வேறு உறுப்படியாக எதையாவது நமது 'செயல்படும்' அரசாங்கங்கள் சொல்லியிருக்கின்றனவா? நமது நாட்டிற்கு பிரதமர் என்று ஒருவர் இருக்கிறாராம்! எனக்கு மறந்து விட்டது!  

நமது தொலைக் காட்சி நிறுவனங்களும் மற்றுமொறு குண்டு வெடிப்பு நிகழும் வரை, இந்த Clippings -ஐ போட்டு கதை பண்ணிக் கொண்டி ருக்கலாம்.

உண்மையில் நாம் தீவீர வாதம் பற்றி நாம் ஏதாவது முழுமையான ஆய்வு மேற்கொண்டிருக்கிறோமா? அமெரிக்காவில் 9/11 நடந்தது.  எப்படி விழித்துக் கொண்டு விட்டனர்! உள் நாட்டு பாதுகாப்புக்கு அவர்கள் எடுக்கும் நடைமுறைகளை நாம் எப்போதாவது கவணித்திருக்கிறோமா?  

நாமும் எதற்காக RAW -CBI - ராணுவம், Intelligence Agencies போன்றவற்றை வைத்துக் கொண்டி ருக்கிறோம்? வெண்ணை வெட்டுவதற்காகவா?

பேசாமல் மேற்சொன்ன 10 வாசகங்களுக்கு பதிலாக கீழ்க் கண்டவற்றைச் நமது அரசியல் வாதிகள் சொல்லட்டும். ஏனெனில் இவர்களது வசனங்கள் எங்களுக்கு சலித்து விட்டன. 

1. எங்களை நம்பி அரசாங்கத்தை ஒப்படைத்தீர்கள் அல்லவா? உங்கள் உயிருக்கெல்லாம் இவ்வளவு உத்தரவாதம் தான் தரமுடியும். வேண்டுமானால் குண்டு வெடிக்கும் போதெல்லாம் எங்களது "ஆழ்ந்த அதிர்ச்சியினைத்" தெரிவித்துக் கொள்கிறோம்.

2. தீவீர வாதத்தினை எதிர்க்கிறோம் என்று சும்மா டீக்கடை பெஞ்சு போல ஏதாவது 'பினாத்திக்' கொண்டிருப்போம்! அதையெல்லாம் நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் இருபது வருடங்களுக்கு 'கசாபையும்', 'அப்சலையும்' வி.ஐ.பி அந்தஸ்த்துடன், "சம்பந்தி உபசாரம்" செய்து கொண்டிருப்போம். வேண்டுமானால் 'தீவீர வாத' எதிர்ப்பு தினம் என்று ஒன்று கொண்டாடிவிடலாம்.  வேறேன்ன எங்களால் செய்ய முடியும்?  CBI /RAW/Intelligence Agencies  - போன்றவை எல்லாம், எங்களை வேண்டாதவர்களை உள்ளே பிடித்துப் போடுவதற்காகத்தான் வைத்திருக்கிறோம்.  இவர்கள் தீவீர வாதிகளிடமிருந்து பாதுகாப்பு தருவார்கள் என நீங்கள் முட்டாள் தனமான நம்பிக் கொண்டிருந்தால் நாங்களா பொறுப்பு?


3.  இந்த மாதிரி ஏதாவது நடந்தால் தான் (எதிர்க்கட்சியோ / ஆளுங்கட்சியோ ) பார்லிமெண்டில் ரகளை பண்ணி பாராளுமன்றத்தை முடக்கிவைக்கலாம்? 

4. அதுதான ஐந்து லட்சமோ பத்து லட்சமோ நிவாரணம் கொடுத்து விட்டோமே? பேசாமல் வாங்கிக் கொண்டு சாவதை விட்டு விட்டு கேள்வியெல்லாம் கேட்காதீர்கள்.

5. குற்றவாளிகள நீதியின் முன் நிறுத்துவோம் என பகல் கணவெல்லாம் காணாதீர்கள். அதற்கெல்லாம் எங்களுக்கு வக்கில்லை.  தப்பித்தவறி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து விட்டாலும், ஒரு இருபது வருடம் தூங்கிவிட்டு பின்னர்தான் என்ன செய்யலாம் என யோசிப்போம்.  அதுவும் எதிர்க் கட்சியினர் என்ன சொல்கின்றனர் என்பதைப் பார்த்துவிட்டு!

6.  கடைசியாக:  அட போங்கப்பா!!  குண்டு வெடித்தால் பேசாமல், சாவதை விட்டு விட்டு, எங்களிடம் ஏன் வருகிறீர்கள்.  "சுவிஸ் பேங்கில் கல்லா" கட்டுவதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை!

-end-

Friday, September 2, 2011

பிள்ளையாருக்கு ஒரு சேதி....

காலை ஐந்து மணி.. கிர்..புர் என்றது செல்பேசி..  யாரப்பா இது இந்த காலையில்.. என்று யோசிக்கும்போதே நின்றுவிட்டது.  சரிதான் இது எஸ்.எம்.எஸ் டோண்.   ஏதோ ஒரு ஒன்றுக்கும் உதவாத ஒரு மெஸேஜ் வரும்.... அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் தூங்கினேன். 

ரொட்டீன் வேலைகளை முடித்து,  நிதானமாக செல்போனை எடுத்து பார்த்தபொழுது எட்டு எஸ்.எம்.எஸ்.  எல்லாம் “ஹாப்பி வினாயகர் சதுர்த்தி” .  இப்பொழுது பிள்ளயார் சதுர்த்திக்கெல்லாம் கூட “கிரீட்டிங்க்ஸ் மெஸேஜ் அனுப்புகிறார்களா என்ன? 

அந்த காலத்தில் எல்லாம் “வாழ்த்து அட்டை என்பது ‘பொங்கல் காலத்தில் மட்டும்தான்.  இதற்கென தனியாக பிளாட்பாரங்களில் ‘திடீர் கடைகள் தோன்றும்.  ஜோடி மாடுகள், தனி மாடு, பொங்கல் பானை, கரும்பு, வண்டிமாடு, மறக்காமல் ஒரு பெண்-இவை யாவும் பல்வேறு காம்பினேஷன்களில் விற்கும்.  ஒரு கார்டு குறைந்த பட்சமாக 10 பைசா தான்!  இந்த கார்டுகளை வாங்குவதற்காக ஒருமாதம் முன்பிருந்தே சிறுவர்கள் நாங்கள் காசு சேர்க்க ஆரம்பிப்போம்.

நிறைய காசு உள்ள பையன்கள், ‘கவருக்குள் வைத்து ஒட்டி அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வாங்குவார்கள்.  அதிலும் இதே மாடு-கரும்பு-பொங்கல் பானை சமாசாரம் தான். கொஞ்சம் பள-பள காகித்த்தில் இருக்கும். 

அப்புறம் கொஞ்சம் காலம் மாறிப்போய், எம்.ஜி.ஆர், சிவாஜி, கே.ஆர்.விஜயா, விஜய நிர்மலா (அந்த கால கவர்ச்சி நடிகை) படம் போட்ட கார்டுகள் விற்றன. இம்மாதிரியான கார்டுகள் வாங்கி வந்தாலோ அல்லது நமக்கு யாராவது அனுப்பினாலோ அவற்றை உடண்டியாக ஒளித்து வைத்துவிடுவோம்.  வீட்டுப் பெரியவர்களிடமிருந்து ‘காவலிப் பய என்ற பட்ட்த்திலிருந்து தப்பிக்க. 

எங்க வீட்டுக்கு இருபது அட்டைகள் வந்தது? உனக்கு?

வந்த அட்டைகளை பத்திரமாக வைத்திருப்போம். அடுத்த பொங்கல் வரை. அழுக்காகமல் இருந்தால், ரவிக்கைத்துணி சுழற்சி போல, மீண்டும் பயன்படுத்தலாமே? 

சில சமயம், வாழ்த்து  அட்டைகளின் ஒட்டப்படும் ‘ஸ்டாம்புகளில் போஸ்டாபீஸ் சீல் விழாது. அத்தகைய அட்டைகளை தண்ணீரில் ஊறவைத்து, கிழியாமல் ‘ஸ்டாம்புகளை பிய்த்தெடுப்பது தனிக்கலை.


தீபாவளிக்கு “பட்டாசு வாங்கியாச்சு என்பது போல, பொங்கலுக்கு ‘வாழ்த்து அட்டை வாங்கியாச்சு என்பது சிறார்களுக்கு முக்கியமான கவலை!

பொங்கல் வாழ்த்து மாதிரி ‘தீபாவளி வாழ்த்து அட்டைகள் விற்பனை எல்லாம் கிடையாது!  ‘கங்கா ஸ்னானம் ஆச்சா வோட சரி..

பிறகு மெள்ள, மெள்ள இந்த கலாச்சாரம் காணாமற் போய், பிறகு பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் பிரபலமாயின. சிறு வயதில் நான் பிறந்த நாளை கொண்டாடியதாக நினைவேயில்லை.  எதாவது ஒருவருஷம், தப்பித்தவறி பெரியவர்களுக்கு நினைவுக்கு வந்துவிட்டால், கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வருவார்கள்.  அதுவும் இக்காலம் போல அந்த-அந்த தேதிகளில் இல்லை. ஜென்ம நட்சத்திரம் என்று வருகிறதோ அன்றுதான் பிறந்த நாள். இதனால் தான் ஃபேஸ் புக்கில் யாராவது ‘ஹாப்பி பர்த்டே சொல்லும் போது புளகாங்கிதம் அடைய முடியவில்லை.  பர்த்டே என்பது மற்றுமொரு நாளே!


அது கிடக்கட்டும் விடுங்கள். இந்த பி.நா.வா. அட்டைகள்  அப்பாவுக்கு, அம்மாவுக்கு,அக்காவுக்கு, தம்பிக்கு,தங்கைக்கு, ஏன் மாப்பிள்ளைக்கு கூட தனித்தனியாக கிடைத்தன. 

அப்போது, குழந்தைகள் கூட, பிறந்த நாளன்று ஒரு ‘ஆர்ச்சீஸ் கிரீட்டிங்ஸ் கார்டு அனுப்பவில்லையெனில், விரோதமாக பார்க்கும்.

இந்த கார்டு அச்சடிக்கும் கம்பனிகளுக்கு ‘வசனம் எழுதிகொடுக்க ஸ்பெஷல் எழுத்தாளர்கள் கூட உண்டு! 

‘வசனகளை செலெக்ட்பண்ணுவதற்காக பாய்/கேர்ள் பிரண்டுகளை அழைத்துச் செல்வதெல்லாம் நடக்கும். அதுவும் ‘காதலனுக்கோ / காதலிக்கோ பிறந்த நாள் எனில் செலக்ஷன் இன்னும் களை கட்டும்! அதென்ன விசேஷமோ தெரியவில்லை, காதலர் பிறந்த தின கார்டுகள் எல்லாம் 50ரூபாய்க்கு மேல்தான். மோகத்தில் இருப்பவர்களிடமிருந்து நோகாமல் “பறிக்க இது நல்ல வழி இல்லையா?

பின் இதுவும் மாறி விட்ட்து.  இப்போது எல்லாம் e-Card தான்.  காசு செலவில்லாமல், ஸ்டாம் ஒட்டாமல், ஆன்லைனில் தேடித்தேடி செலக்ட் செய்து அனுப்பலாம். ஒரு எலி போதும்.

பிறந்த நாள் கார்டு மட்டுமல்ல, அம்மா நாள், அப்பா நாள், காதலர் நாள், நண்பர் நாள், குருவி நாள், கொழுந்தியாள் நாள், நாத்தனார் நாள் என பல்வேறு தினுசுகளில் நாட்கள் வருகின்றன. அமெரிக்க நாகரிகத்தை காப்பியடிக்காவிட்டால் நமது மானம் மரியாதை யெல்லாம் என்னாவது? மல்ட்டி நேஷனல் கம்பணிகள் கல்லா கட்ட வேண்டாம்?

என்னதான் இந்தியத்தனமாக இருந்தாலும் ‘ஹாப்பி வினாயகர் சதுர்த்தி  என்பது கொஞ்சம் இடிக்கத்தான் செய்கிறது. 



வினாயகர் ரௌத்தர சுவாமி இல்லை.  பயமில்லாமல், அவரை எப்படி வேணுமானாலும் வரையலாம். வாழ்த்தலாம்.  இலை போல, கம்ப்யூட்டர் போல, மௌஸ் போல, கட்டிடம் போல தங்களது கற்பனை திறத்திற்கேற்றாற் போல வரைந்து தள்ளலாம்.  அவரது உருவம் வேறு  எப்படி வேண்டுமென்றாலும் வரைவதற்கு ஏற்றால் போல இருக்கிறதல்லவா?  அவர் எதற்கும் கோவித்துக் கொள்ள மாட்டார்.

 இதே ரீதியில் ‘ஹாப்பி ஏகாதசி, ஹாப்பி அமாவாசை என வராமலிருந்தால் சரி.

Sunday, August 21, 2011

அந்தந்த வயதுக்கு.....

அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் எந்த கணமும் நிகழும். 
எதிர்காலம், நமக்காக, தனக்குள் வைத்திருக்கும் செய்திகள் பலவும் ரகசியமானவை. 18/08/2011 அன்று மாலை,  பணி நிமித்தமாக அருகில் உள்ள விருத்தாஜலம் என்ற ஊருக்கு சென்று திரும்பிக் கொண்டி ருந்தேன். கைபேசியில் பழக்க மில்லாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு. 

"நான் 'குமார் பேசறேன்!"

" எந்த குமார்? எங்கிருந்து?" 

" நான் தான் திருச்சி குமார்"

நினைவுக்கு வந்துவிட்டது.  எனது சகோதரர் மகன். 

"என்னப்பா நல்லாயிருக்கியா? என்ன விசேஷம்?"

"சித்தப்பா.. கடலூர் மகாத்மா மெடிக்கல் காலேஜ் மருத்துவ மணையில் "Skull Open Surgery"  செய்யலாமா?

இந்த திடீர் விணாவிற்கு நான் தயாராக இல்லை. கொடுத்த தகவல்களும் போதுமானதாக இல்லை.  குமார் மிகுந்த பதட்டத்தில் இருந்தார்.  அவரிட மிருந்து பெற்ற தகவல்களைத் தொகுத்துப் பார்த்த உடண், பதட்டம் எனக்கும் தொற்றிக் கொண்டது.

விஷயம் இது: மதியம் குமாரின் தந்தை (எனது சகோதரன்) தனது வீட்டு மாடிக்கு சென்றிருக்கிறார்.  இறங்கி வரும்பொழுது, மாடியிலிருந்து இரண்டாவது படியிலிருந்து கீழே எட்டிப் பார்த்திருக்கிறார். என்ன நிகழ்ந் தது எனத் தெரியவில்லை!  கிட்டத்தட்ட ஏழு/எட்டு அடி உயரத்திலிருந்து தலைகுப்புற தரையில் விழுந்துவிட்டார். விழுந்த இடம் தண்ணீரைத் தேக்கி வைக்க பயன்படும் 'சம்ப்'. 

ஏதோ சப்தம் கேட்கிறதே என சந்தேகமாய் வீட்டில் உள்ளவர் வந்து பார்க்கும் பொழுது, தலை சம்ப் ஸ்லாபில் மோதி இரத்தம் ஊற்றாய் தலையிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அவரை, முன்பு சொன்ன மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நவீன மருத்துவ கருவிகள் மூலம் கண்டுபிடித்தது என்னவெனில், விழுந்த வேகத்தில், தலையில் மூளையைச் சுற்றி வலது பக்கத்தில் மிகுந்த அளவில் இரத்தம் உறைந்து கிடக்கிறது. இதனால் மூளை 14 mm இடது பக்கமாக நகர்த்தப்பட்டுவிட்டது.  உடனடியாக தலையில் ஆபரேஷன் செய்து உறைந்த இரத்தக் கட்டிகளை அகற்றியாக வேண்டும். இல்லை யெனில் உயிருக்கு ஆபத்து நேரும்.

இந்த நிலையில்தான் மேற்கண்ட கேள்வி எழுப்பப் பட்டது! "கடலூர் மகாத்மா மெடிக்கல் காலேஜ் மருத்துவ மனையில் "Skull open surgeroy"  செய்யலாமா? இல்லை சென்னைக்கு அழைத்துச் செல்லலாமா?"

என்ன சொல்ல? 

இந்த சூழ்நிலையில் எவருக்கும் குழப்பம் வருவது இயல்புதானே?  செய்தி தந்த அதிர்ச்சி ஒருபுறம்.  சில நிமிடங்களில் முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் ஒருபுறம்.

"பதட்டப் படாதே... விசாரி... நம்பிக்கையான, விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரி... " எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஒரு expert உதவினார்.  "ஒரு சர்ஜனின் பெயரைச் சொல்லி, அவர் நம்பிக் கையாகச் சொன்னால், அவரே அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் இந்த மருத்துவ மனையிலேயே செய்து கொள்ளலாம்" என பதில் வந்தது.  அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது போலும்!  வாரம் ஒரு முறை சென்னையிலிருந்து வரும் அந்த சர்ஜன் தான், இவரை கவனித்திருக் கிறார். எனவே உடனே அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தோம்.

இரவு 9 மணிக்கு தெரிவித்தார்கள். இரத்தம் இரண்டு யூனிட்கள் வேண்டும். "A1-negative". அரிதான இரத்த குரூப்.  ஆஸ்பத்திரியில் ஸ்டாக் இல்லை என்றனர். (ஒரு யூனிட் தான் இருக்கிறதாம்) இந்த நேரத்தில் எங்கேபோய்த் தேட?  நானே A1-negative என்பதால் ஒரு யூனிட் கொடுத்து விட்டேன். மற்றுமொரு யூனிட்டுக்கு ஆளாளுக்கு தேடினார்கள். கிடைக்கவில்லை.  காலை Replacement தருவதாக வாக்குறுதி தந்துவிட்டோம்.

அறுவை சிகிச்சை காலை 4 மணிவரை நடந்தது. ஆப்பரேஷன் சக்ஸஸ்.   பிற பாதிப்புகள் எதேனும் உள்ளனவா என்பது பிறகுதான் தெரியும்.

இந்த விஷயத்தை உங்களிடம் எதற்காகச் சொல்கிறேன்?

வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த வயதுக்கு உண்டான காரியங்களைத் தான் செய்ய வேண்டும். செய்ய அனுமதிக்க வேண்டும். அடிபட்டவரின் வயது 70. இந்த வயதில் மாடியிலிருந்து எட்டிப் பார்க்காவிட்டால் என்ன?  கீழ்க்கண்ட குறிப்புகளைப் படியுங்கள்:


1.  Falls are the leading cause of TBI.(Traumatic Brain Injury)

     People ages 75 and older have the highest rates of TBI-related 
     hospitalizations and death. 

2. How to make the surroundings safer: 

    a. Nearly half of all falls happen at home. 
        Here are some things you can do to make your home or surroundings safer:

    b. Remove things from stairs and floors that might cause you to trip, like papers, books, 
        clothes, and shoes. 

   c.  Remove small throw rugs or use double-sided tape to keep the rugs from slipping.

   d. Keep items you use often nearby. You should not need to use a step stool to reach them. 

   e. Have grab bars put in your bathroom. Place them next to the toilet and in the tub or shower.

   f. Place non-stick mats in the bathtub and on shower floors. 

   g. Improve your lighting. We need brighter lighting as we age. 
       Change your lampshades or use frosted light bulbs to help reduce glare.

   h. Be sure there are handrails and lights on all staircases.

   i. Wear shoes /Sandals that give you good support. They should have thin, non-slip soles. You 
      should  avoid  wearing slippers and socks.


3.  Have your vision checked (This is most important)

     The eye doctor should be sure you have the correct  eyeglasses and that you have 
     no conditions limiting your vision, like glaucoma or cataracts. Poor vision can increase the 
     chance of  falling


4.  மிக முக்கியமாக, மனதில் உறுதி இருந்தாலும், உடலில் வலு இல்லா விடில், ரிஸ்கான  எந்த காரியத்தையும் செய்யக் கூடாது. 

 உதாரணம்: 

 இரவில் வாகனங்களை ஓட்டுதல்,   
  வழுக்கும் இடங்களில் நடத்தல்,
 வயதுக்கு மீறிய பளுவினை தூக்குதல், 
  ஸ்டூல்-ஏணி   இவற்றின் மேல் ஏறுதல்.

விழுந்து அடிபட்டுக் கொண்டால், பாதிப்பும் வலியும் உங்களுக்குத்தான்.  இவற்றை   எவரும் உங்களுக்காக வாங்கிக் கொள்ள முடியாது. 

உங்களுக்கும்-உங்கள் பிள்ளகளுக்கும் மிகுந்த சிரமத்தினையும்-மனவேதனையையும்   ஏற்படுத்தாமலிருக்க மேற்சொன்ன வழிகளை கடைப்பிடியுங்கள்.

ஜன் லோக் பால்


மத்திய அரசு சொல்லும் "லோக்பால் (LP)"  மசோதாவுக்கும்- அன்னா ஹசாரேயின் லோக்பால்(JLP) மசோதாவுக்கும் என்னதான் வித்தியாசம்? 

1. லோக்பாலின் அதிகார வரம்பு:


அரசு:  பதவியில் இருக்கும் பிரதமர், நீதித்துறையினர்,குரூப் 'A' அதி காரிகளுக்கு கீழே உள்ளவர்கள் லோக்பால் வரம்புக்குள் வரமாட்டார்கள் .


அன்னா:  பிரதமர், நீதித்துறையினர், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள் என அனைவரும் லோக்பால் பரிசீலனை வரம்பிற்குள் வரவேண்டும்


2. லோக்பால் குழு:


அரசு: லோக்பால் குழுவில் தலைவர் தவிர அதிக பட்சம் 8 பேர் இருப்பர். அதில் பாதிஉறுப்பினர்கள், நீதித்துறை பின்னனி உள்ளவர்களாக இருப்பர்.


அன்னா: தலைவரைத் தவிர 10 பேர் இருக்க வேண்டும். அதில் 4 பேர் நீதித் துறை பின்னனியாக இருக்க வேண்டும்.


3.  இந்த குழுவினைத் தேர்வு செய்வது எப்படி:


அரசு:  லோக்பால் உறுப்பினர்களை தெரிவு செய்யும் கமிட்டியில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இருவர், இரு உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், CAG மற்றும் சென்ற லோக்பால் கமிட்டியின் தலைவர்.


அன்னா: பத்து உறுப்பினர்களில் ஐவர், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் அல்லது, தலைமை தேர்தல் அதிகாரி அல்லது 'CAG'. மீதி உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து.


4.  உறுப்பினருக்கு தகுதி:


அரசு: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி யாகவோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருந் திருக்க வேண்டும். இது தவிர, ஊழல் எதிர்ப்பு கொள்கையிலோ,பொது நிர்வாகத்திலோ,vigilanace or finance -ல் 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


அன்னா: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள்10 வருடம் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது உச்ச நீதி மன்றத்தில் 15 வருடம் வக்கீலாக இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். 




5.  லோக்பால் உறுப்பினர் தகுதி நீக்கம்:


அரசு: குடியரசுத்தலைவர் தானாகவோ அல்லது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொழுத்திட்டு கொடுத்தாலோ, அல்லது யவரேனும் குடிமக்கள் மனு கொடுத்து, அந்த மனுவின் பேரில் திருப்தி அடைந் தாலோ,  உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி, பின் பதிவி நீக்கம் செய்யலாம். 


அன்னா:  பொதுமக்களில் யார் வேண்டுமானாலும், சுப்ரீம் கோர்ட்டில் மனுகொடுத்து, அந்த மனுவில் உண்மை யிருக்குமானால், குடியரசுத் தலைவருக்கு, அந்த உறுப்பினர பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.


6. எதைப்பற்றி விசாரிக்கலாம்:


அரசு: லஞ்ச தடுப்பு விதிகளின் கீழ் வரும் விஷயங்களை மட்டும் விசாரிக்கலாம்.


அன்னா: மேற்சொன்னதைத் தவிர, குற்றவியல் சட்டத்தினை மீறுப வர்கள், ஒழுங்கீனாமாக நடந்து கொள்பவர்கள், குடிமக்களின் உரிமை களை மீறுபவர்கள் என பலரும் இந்த மசோதாவின் கீழ் வருவார்கள். (Violation of Indian Penal Code, victimization of whistleblowers and repeated violation of citizen's charter). 


7. விசாரணை:


அரசு: லோக்பால் அமைப்பில், விசாரணைப் பிரிவு தனியாக இருக்கும்


அன்னா: CBI அமைப்பே, லோக்பால் கீழ் விசாரண நடத்தும். (CBI will be under the Lok Pal while investigating corruption cases)


8. விசாரணை அமைப்பு: 


அரசு: அரசாங்கமே லோக்பால் அமைப்பிற்கு prosecution wing அமைத்து தரும்.


அன்னா: The CBI's  prosecution wing will conduct this function.


9. வழக்கு: 


அரசு: சிறப்பு நீதிமன்றத்தில் லோக்பால் அமைப்பு வழக்கு தொடுக்கும். முன் அனுமதி தேவையில்லை.


அன்னா: பிரதம,மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதிகள்ர் உட்பட எவர் மீதும் லோக்பால் அமைப்பினரே 7-க் கும் மேற்பட்ட உறுப்பினரின் அனுமதியின் பேரில் வழக்கு தொடுக்கலாம்.


10. இதர:


அன்னா: ஊழல் குற்றச்சாட்டைத்தவிர, குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.


அரசு:  அப்படிப்பட்ட அதிகாரம் லோக்பாலுக்கு இல்லை.

Monday, August 15, 2011

ஹசாரேவுக்கு அனுமதி மறுப்பு:


மத்திய அரசு, தில்லி போலீஸ் மூலம், "அன்னா ஹசாரேவுக்கு" வுக்கு 'உண்ணா விரத போராட்டத்தை' துவங்குவதற்கு அனுமதி மறுத்துள்ளது.  மக்கள் சாத்வீகமான வழியில் தங்களது கருத்துக்களை ஜன நாயக முறையில் எடுத்துச் சொல்லுவதற்கு, தனது 'அதிகாரத்தை' பயன்படுத்தி, தடை விதிப்பது சரியில்லை. 


எங்கும் விரவியிருக்கும் "ஊழல்",  எல்லா தரப்பு மக்களையும் கோபமுற வைத்துள்ளது.  "ஹசாரே"  தனக்கு தோன்றிய வழியில் எதிர்ப்பைத் தெரி விக்கிறார். 


மத்திய அரசுக்கு தங்களை எதிர்ப்போர் மீதெல்லாம், திரும்ப, குற்றஞ் சாட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளுது.   "பாபா ராம் தேவ்", காங்கி ரஸின் 'நல்லென்னத்துக்குள்' இருந்தவரை அவரை உயர்வாகக் கொண்டா டினர்.  அவரே அரசாங்கத்தை எதிர்க்கும்போது மோசமான ஆளாக சித்த ரிக்கப் பட்டார்.   வரி ஏய்ப்பு, கருப்புப் பணம் ஆகிய குற்றச்சாட்டுக்களை இவர் மீது கண்டுபிடித்தனர்.  பாபாவை தில்லியை ஏர்போர்ட்டில் வரவேற் கச் செல்லும் போது, இந்த குற்றச்சாட்டுக்களை சொல்லியிருப்பது தானே? பாபா ராம்தேவ் 'ஊழலை எதிர்த்து போராடும் போது" தானா இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது?


அதே பாணியை ஹசாரே மீதும், இப்போது ஏவுகின்றனர்.  இவர் ஊழல் செய்தவராம்.  நேற்றுவரை இந்த குற்றச்சாட்டு எங்கே போயிருந்தது?  இவர் மத்திய அரசை எதிர்க்காமலிருந்தால், ஹசாரே தொடர்ந்து 'காந்திய வாதியாகவே' இருந்திருப்பாரா? 


இம்மாதிரியாக காங்கிரஸ் நடந்து கொள்வது,அவர்களை சந்தேகப்பட வைக்கிறது.  தனது தவறுகளை திருத்திக் கொள்லாமல், தவறு செய்த வர்களை தண்டிக்காமல்,  குற்றம் சாட்டுபவர்களின் மீதே தாக்குதல் தொடுக்கின்றனர். இது குறித்து அரசுக்கு வெட்கமேதும் இல்லை!


"ஹசாரே" இந்தப் போராட்டத்தில் வெல்வாரா - மாட்டாரா என்பதல்ல பிரச்சினை.  அரசியல் போராட்டங்களை 'அரசியல்' மூலம் தான் வெல்ல முடியும்.  இதற்கு விவசாய, தொழிலாளி வர்க்கங்கள் தான் "அமைப்பு ரீதியாக"  திரண்டு, பொது மக்களை திரட்டி போராட வேண்டும். ஒரு 'Mass'  போராட்டம் தான் நிலைமையை மாற்றும்.  


ஆனால் இன்றைய சூழ் நிலையில் 'ஒரு பொது நலத்தொண்டர்'  ஆளும் அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கக் கூட அனுமதிக்க மாட்டேன் என்பது, 'எமர்ஜென்ஸியை' நினைவுறுத்துகிறது.

சுதந்திர தின உரைகள்:

தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலை வரும், பிரதமரும் ஆற்றியஉரைகளில் ஊழல் குறித்து கருத்துரைத் துள்ளனார்:

குடியரசுத்லைவர்:

நமது நாட்டின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையை ஊழல் இன்று ஒரு புற்றுநோயைப்போல் பாதித்து வருகிறது. இதை உடனடியாக ஒழிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசு, பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

ஒரே மருந்தில் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியாது என்பது போல், ஒரே வழிமுறையில் ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு எதிராக தடுப்பு, தண்டனை, பகுத்தறிவுடன் கூடிய அணுகுமுறை போன்ற பல்வேறு நிலைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர்:

நாட்டில் வறுமையை ஒழிக்க அரும்பாடுபட்டு(?) வருகிறோம். ஊழல், நாட்டின் வளர்சிப்பாதைக்கு தடையாக உள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் மீது இந்த அரசு சட்டப்பூர்வ நடவடிக்கையை துரிதமாக எடுத்து வருகிறது. பலமான லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்க இந்த மசோதா பயன் தரும். உண்ணாவிரதமோ , போராட்டமோ வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க முடியாது. பார்லி.,யில் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். 


குடிமகன் கேட்கிறான்:

நடந்த ஊழல்களுக்கு (2ஜி ஒரு உதாரணமே) யாரை பொறுப்பேற்க வைக்கலாம்?  எதுவும் எனக்குத் தெரியாது என்று பம்மும் பிரதமரையா?  நம்மை யாரும் கேட்பதற்கு உலகில் எவனும் இல்லை எனச் செயல்பட்ட ஊழல் அமைச்சரையா? உங்களையெல்லாம், அரசில் பங்கேற்காமலேயே, ரிமோட் கண்ட்ரோலில் கட்டுக்குள் வைத்திருக்கும் கட்சித் தலைவரையா?  யார்தான் பொறுப்பேற்கப் போகிறீர்கள்?

நடந்தவை எல்லாம் பிரதமருக்கு தெரிந்து தான் நடந்தது என விடாமல் குற்றஞ்சாட்டுகின்றாரே?  உங்களது பதில் என்ன?

ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், ஊழல் பேர்வழிகள் என்ன, பாகிஸ்த்தான் இல்லை சீனாவிலிருந்தா வந்துள்ளனர்? இந்த தேசத்தை (சில ஆண்டுகள் நீங்கலாக) சுதந்திரம் அடைந்தது முதல், ஆண்டு வருபவர்கள் நீங்கள் தானே? அப்படியானால் மக்கள் யாரை எதிர்த்து போராட வேண்டும்?  அரசு இயந்திரம் உங்கள் கட்டுப் பாட்டில் இருக்கிறதா இல்லை நீங்கள் அதன் கைப்பாவாயா?

காந்தியின் அஹிம்சை வழியினை நினைவுகூறும் நீங்கள், அதே அஹிம்சைவழியில் போராடும் 'ஹசாரே' வுக்கு நீங்கள் காட்டும் இடம் என்ன? திகாரா?

ஹசாரேவினால் மட்டும் ஊழலை நீக்கிவிட முடியும் என எவரும் நம்பவில்லை.  'லோக்பால்'  ஒரு சின்ன ஆரம்பம். மக்களிடையே ஒரு விழிப்புணர்வு.  உங்களுக்கெல்லாம் ஒரு சின்ன பயம் வரக்கூடும். அவ்வளவுதான்.

ஆனால் 'லோக்பால் சட்டத்தின்' பார்வைக்குள்ளேயே நீதித் துறையி னையும், பிரதமரையும் கொணர மாட்டேன் என அடம் பிடிப்பதின் உட்-பொருள் என்ன?  அவ்வாறு செய்வதில் உங்களுக்கு, என்ன பிரச்சினை? அப்படி செய்தால் பிரதமரின் பதவிக்கு மரியாதை இழப்பு எனில், அதற்கு மாற்று ஏற்பாடுகள் என்ன?  

பிரதமர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்ற 'Moral' உங்களுக்கு இல்லாவே இல்லையா?  

நாட்டின் ஊழல் மட்டுமல்ல, அனைத்து பிரச்கினக்களுக்குமான ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது எனவும், அதற்கான விடைகள் என்னவென்றும் உங்களுக்கும் தெரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும்.  

ஆனாலும் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று "ஃபார்மலாக",   "நலம் - நலமறிய நாட்டம்" என்று ஒரு உரையை எழுதி வைத்துக் கொண்டு, கண்ணாடிக் கூண்டுக்குள், பத்திரமாக இருந்து கொண்டு படியுங்கள்.  நாங்களும் "இ.வா" மாதிரி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

மக்கள், நமது அமைப்புகளின் (பாராளுமன்றம், அரசு, நீதித்துறை) மீதும் , ஜனநாயகத்தின் மீதும், மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து கொண்டுள்ளனர் .  கவணிக்கிறீர்களா?  பிகாரிலும் ஒரிசாவிலும் நடப்பது பற்றி ஊளவுத்துறையினர் ஏதாவது சொல்கின்றனரா? அது உங்கள் காதுகளில் விழுந்ததா? 

மக்கள் 
அரசாங்கங்கள் மீது நம்பிக்கையிழ்ந்து விட்டால், 
அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதாவது புரிகிறதா?


Sunday, August 14, 2011

Independence day Wishes to All

சுதந்திர இந்தியாவில்தான் பிறந்தேன்.  எனவே 1947-க்கு முந்தைய சரித்திரம் எல்லாம் புத்தக அறிவு தான். சுதந்திரம் என்றால் என்ன என்பதெல்லாம் புரிந்தது, 20 வயதுக்கு அப்புறம் தான்.  பள்ளி நாட்களில், கொடியேற்றத்தின் போது கிடைக்கும் 'பப்பர்மிண்ட் மிட்டாயை" த்தவிர' வேறேதிலும் நாட்டமில்லை.  


சுதந்திரம் அடைந்தற்காக நாம் "கொண்டாடும் தலைவர்களும்", "முகம் தெரியாத தியாகிகளும்" செய்த நம்பற்கரிய தியா கங்களையும் புத்த கங்கள் வாயிலாகத் தான் தெர்ந்து கொண்டேன்.


வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன், நமது நெல்லிக் காய் மூட்டை சமஸ்த்தானங் களால், கூறு பட்டு கிடந்த நமது நாட்டை, அடிமை செய்வது, சுலபமாக இருந்தது.


இவர்களை விரட்டியடிக்க நமது மூதாதையர் செய்த தியாகங்கள் கொஞ்சமா நஞ்சமா?


சிப்பாய் கலங்களில் போராடி, குண்டடி பட்டு உயிர் நீத்த, நமது தியாகச் சிப்பாய்களால் வந்த சுதந்திரம் இது. 


அஞ்சா நெஞ்சர்கள் பகத்சிங், சந்திரபோஸ் போன்ற தியாகிகளால் கிடைத்த வாழ்வு இது. 


மனைவியை ஆங்கிலேயன்,துகிலிரிக்கும் போது கூட கணவன் எங்கே பதுங்கியுள்ளான் என கூற மறுத்த பெண்களால் வந்த சுதந்திரம் இது! 


ஆங்கிலேயனிடம் அடிபட்டு செத்தாலும் சாவேனே தவிர, இந்தியக் கொடியை கீழே போட மாட்டேன் என முழக்கமிட்டு உயிர் நீத்தவர்களால் வந்த சுதந்திரம் இது! 


சுதந்திரப் போராட்டத்திற்காக பள்ளிப் படிப்பை, கல்லூரிப் படிப்பை, உத்தியோகத்தை, நில புலன் களை துச்சமாக மதிதது, போராட்டகளில் இணைந்த வீரச் செல்வங்களால் கிடத்த சுதந்திரம் இது!


எந்த நாடு தியாகிகளை மறக்கிறதோ அந்த நாடுகள் எல்லாம் மீண்டும் அடிமைப்பட சபிக்கப்பட்டுள்ளது!


ஆனால், நாம் நமது தியாக புருஷர்களுக்கு நாம் என்ன பதில் வைத்தி ருக்கிறோம்? 


அனைத்து திட்டங்களிலும், நமது கேடுகெட்ட அரசியல் வாதிகள், சுருட்டோ சுருட்டென்று சுருட்டி, சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்திருக்கிறார்கள் என்றா? (கார்கில் சவப்பெட்டியிலிருந்து, 2ஜி வரையும் எதையும் விட்ட பாடில்லை)


64 வருடங்கள் ஆனபின்னும் ஏழ்மை நீங்கிய பாடில்லை என்றா?


நூறு சதம் கல்வியறிவு எட்டவில்லை என்றா?


ராஜ பரப்பரை போல நமது அரசியல் தலைவர்களின் வாரிகள் நாட்டை ஆளுவதற்கு, "பெருமாள் மாடு" போல, மக்களாகிய நாம்,  தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறோம் என்றா? 


நேரு குடுப்பத்தை விட்டால், இந்தியாவை ஆள, எவனுமே இல்லையா என்ன?  


இங்கே கருணானிதிக்கு இரண்டு வாரிசுகள். கேரளாவில் கருணாகரனின் வாரிசு ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி!  தில்லியிலும் வடக்கிலும்  கணக்கே இல்லை !


நாட்டின் எல்லா அரசியல் கோளாறுகளுக்கும் , சில வருடங்கள் நீங்க லாக, இந்தியாவை 'ஆட்சி செய்து வந்த நேரு குடும்பம்' தான்,  பொறுப் பேற்க வேண்டும்.  


சரி.."நேரு குடும்ப கட்சிக்கு"  மாற்று ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்து பி.ஜே.பி யிடம் ஆட்சியைக் கொடுத்தால், காங்கிரஸே பரவா யில்லை என ஆக்கிவிட்டார்கள்.  மத்திய அரசு, ம.பி, உ.பி, ராஜஸ்த்தான் என கிடைத்த எல்லா வாய்ப்புக்களயும் சொதப்பினார்கள்.  


இந்த கட்சிக்கு, கடைசியாக் கர்னாடகாவில் 'எடியூரப்பா' என ஒரு கோமாளி கிடைத்தார். நிலத்தில் ஊழல் செய்து, கோவிலில் சத்தியம் பண்ணி, புடவை கட்டி, ஹோமம் செய்து ... , ஒரு வழியாக நடையைக் கட்டினார்.  போதுடா சாமி!


மக்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?  சுதந்திர தினம் என்றால், அன்றைக்கு ஒரு நாள் லீவு, அவ்வளவுதான்.  டி.வி யில் மூழ்கி, "சாம்பார் செய்வதற்கு பெரிதும் உபயோகப்படுவது வெங்காயமா? பெருங்காயமா?" என்று "பாப்பையா" பட்டி மன்றத்தில் மூழ்கிக் கிடப்போம்.  தமன்னாவோ, ஸ்ரேயாவோ சினிமா பேட்டி கொடுப்பார்கள்.  வாயை 360 டிகிரியும் திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டி ருப்போம். அப்புறம் விடாது சினிமா!  சாயங்காலம் ஆனால் 'சாராயத்தைக் குடித்து விட்டு' ரோட்டில் 'கட்டையாகிக்' கிடக்கலாம்.  


ஒரு பத்து நிமிஷம் செலவு செய்து அலுவலக கொடியேற்ற நிகழ்ச்சிக்கு போக முடியாத நம்மால்,  கற்பனை செய்துகூட பார்க்க முடியாத தியாகங்களை செய்து காட்டிய நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளை நாம் நினைவில் கொள்வது எங்கனம்?


குறைந்த பட்சமாக, பகத்சிங், சிங்காரவேலர், ஜீவா, கொடி காத்த குமரன், நேருஜி, நேதாஜி ஆகியோரது சரித்திரங்களை படித்துப் பார்க்க கோரு கிறேன். மெய் சிலிர்க்கும்.  இப்படி யெல்லாம் மனிதர்கள் வாழ்ந்திருக் கிறார்களா என வியப்போம்.  


மக்களது யோக்யதாம்சம் என்னவோ, அதற்குத்தகுந்தமாதிரித்தான் அவர்களுக்கு 'அரசாங்கம்' வாய்க்கும்!  நமது தகுதிக்கு இப்படிப்பட்ட அரசாங்கங்களே போதுமானதோ என்னவோ?


நாளை, அன்னா ஹசாரே "தியாக விளக்கு" ஏற்றச் சொல்லியிருக்கிறார்.  எத்தனை போர் வருகிறார்கள் என பார்போம். மத்திய அரசு "ஹசாரேயை" யும் அவரது ஆட்களையும் உதைத்து உள்ளே தள்ளி சுதந்திர தினத்தை கொண்டாடப் போகிறார்களா இல்லை அரஸ்ட் செய்து சாயங்காலம் விட்டிவிடப் போகிறார்களா என்று? 


இந்த போராட்டம் வெல்வது 'ஹசாரே' கையில் இல்லை! மக்களாகிய நாம் எப்படி "ரியாக்ட்" என்பதைப் பொறுத்துத் தான் இந்த போராட்டம் வெல்வதும்-வீழ்வதும்!   ஜெய் ஹிந்த்!

Thursday, August 11, 2011

வரலட்சுமி விரத - பூஜை


இந்துக்களில் பலரும் செய்யும் வரமஹாலக்ஷ்மி பூஜை 12/08/2011 அன்று வருகிறது. இப்பூஜைக்கு, மற்ற எல்லா பண்டிகைகளையும் போலவும், ஒரு புராணக் கதை இருக்கிறது.


பார்வதியின் சாபத்துக்கு ஆளான, சித்ரநேமி என்ற தேவதை, வரலட்சுமி விரதத்தைக் அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.


சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வத்தின் அகங்காரத்தால், மகாலட்சுமியை அவமதிக்க,  செல்வங்களையும் இழந்தாள்.  அவள் மகள் சாருமதி,  வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, இப்பூஜையை செய்ய, பல நலன் களையும் பெற்றாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் இருந்து , இழந்த செல்வத்தை பெற்றாள்.


வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் சுமங்கலிப் பெண்கள்! கணவன் ஆயுள், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காக இந்த விரதத்தை மேற்கொள் கின்றனர். 


திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். தவிர்க்க இயலாத் நிலையில் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். பூஜை செய்யாவிட்டாலும் சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். அடுத்த நாள் மஹாலக்ஷ்மிக்கு ஹாரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.


மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.  நிவேதன பொருட்களை மற்றவர்களுக்கு வினியோகித்து , தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.


விரிவாக் செய்யும் முறை: 


பூஜைக்கான இடம்: 


வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலை


முன்னேற்பாடுகள்: 


பூஜைக்கான இடத்தை சுத்தம் செய்து,  கோலமிட்டு, மண்டபம் அமைக்க வேண்டும். மண்டபத்தின் கீழ், தலை வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். கலச சொம்பினை அரிசி, தங்கம் ஆகிய வற்றால் நிரப்பவும். மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும். புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் முகத்தினை வைக்கவேண்டும்.  கலசத்தில் காதோலை, கருமணி ஆகியவயும் வைக்கப் படுகிறது. பின் பூக்களால் அலங்கரிக்கவும்.


வசதிப்படின், பூஜை அறையினை ஒட்டிய சுவரில், வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை வரைந்து ஆவாஹணம் செய்யலாம். 


பூஜை முறை: 


முதலில் விக்னேஸ்வர பூஜை, பின் சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ர திஷ்டை,   ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, கடைசியில் ஹாரத்தி. 


பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். .  விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும். அஷ்ட லட்சுமிகளுடன், வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட மஞ்சள் நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து, பூஜையின் முடிவில் இச் சரட்டினை கட்டிக் கொள்கிறார்கள். 


விரதம் ஆரம்பிக்கும் முன்னரோ, அல்லது முதல் நாள் மாலையிலோ, அவரவர்கள் குடும்ப வழக்கப்படி ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, சிறிய நிவேதனம் செய்து,  வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று, கற்பூரம்-ஆரத்தி எடுத்து மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து,  (பாவனையாக) அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் 
வைத்து , விரத பூஜையை ஏற்குமாறு மகாலட்சுமியை வேண்டி ஆவாஹணம் செய்ய வேண்டும். தெரிந்தால் 'வரலக்ஷ்மியை அழைக்கும் பாடல்களைப் பாடலாம். (வரலக்ஷ்மி ராவே மா இண்டிகி)


நிவேதனப் பொருள்கள்: 


பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, பொங்கல்,தயிர், பசும்பால், நெய்,தேன்.


அடுத்தநாள் காலை புனர்ஜை செய்தபின் கலசத்தை எடுத்து அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்


-ஓம்- 

Sunday, August 7, 2011

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க!!

CAG (தமிழில் தலைமை தணிக்கை அதிகாரி?) அவர்கள், காமன்வெல்த் விளையாட்டு செலவுகளைப்பற்றி, சில அட்சேபனைகளை தெரிவித்துள்ளார்.    அவர் சொல்லி யுள்ளது என்ன? காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, தில்லியை அழகு படுத்துவதற்காக ரூ.100 கோடியினை , வீண் செலவு செய்து விட்டனர், மற்றும் Excess Billing  என்பது தான். ஊழல் செய்து விட்டனர் என குறிப்பிடப் படவில்லை. (கல்மாடி விவகாரம் வேறு!) இதன் பொருள் என்ன வென்றால் இந்த 100 கோடிகளை வேறு பயனுள்ள வகையில் செலவழித்திருக்கலாம் என்பது தான். 


உடனே ஷீலா தீட்சித்தே ராஜினாமா செய் என கோஷம் எழுப்பி விட்டது BJP!.  கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு, காங்கிரஸ் பாடிய பாட்டிற்கு எதிர்பாட்டாம்! 


நாம் ஒன்றை புரிந்து கொள்வோம். CAG என்பது திட்டம் போடும் அமைப் பல்ல.  நாட்டிற்கு எது தேவை அல்லது தேவையில்லை என முடி வெடுக்கும் அமைப்பும் அல்ல.  கொடுக்கப்பட்ட தொகை சரியாக செலவழிக்கப்பட்டுள்ளதா (அ) வருமான இழப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது கோளாறு உள்ளதா என கண்டுபிடிக்கும் அமைப்பு தான்.


CAG- சொல்லும் "இந்த வீண் செலவு" என்ற   Objection -ஐ,  இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், இவ்வளவு செலவழித்து செயற்கைக் கோள்கள் செலுத்த வேண்டாம். சந்திராயன் திட்டம் வேண்டாம். மெட்ரோ திட்டங்கள் வேண்டாம், புதிய விமான தளங்கள் வேண்டாம்.  சர்வ தேச தரத்தில் IIM கள் வேண்டாம்- என சொல்லிக் கொண்டே போகலாம்.   


ஆடிட்டர்களுடைய குணாம்சமே எல்லாவற்றையும் கேள்வி கேட்பது தான். அதே போல் காமன் வெல்த் கேம்ஸ் செலவினங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 


திட்டமிடுபவர்களுக்கும் கணக்குப் பிள்ளைகளுக்கும் எப்போதும் தகறாறு இருந்து கொண்டேதானிருக்கும். ஏனெனில் கணக்குப் பிள்ளைகளுக்கு ஏதும் "Vision" இருக்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் Voucher / Head of Account / Revenue Loss அவ்வளவு தான்.   தணிக்கையே வேண்டாம் என்று சொல்லவில்லை. CAG  அறிக்கை குறித்து ஒரு சரியான balanced  பார்வை இல்லை யென்றால், எல்லாமே சந்தேகத்துக்குரியதாகிவிடும். 


சரி! விஷயத்திற்கு வருவோம்.  நமது கேடுகெட்ட அரசியல் வாதிகளும் / ஊழலில் திளைக்கும்அதிகார வர்க்கத்தினரும் தில்லியை அழகு படுத்து வதற்காக ஒதுக்கப்பட்ட 100 கோடிகளையும், ஒரு பைசா கூட திருடாமல் செலவழித்திருப்பார்கள் என சொல்லமுடியாது தான். ஆனால் அப்படி ஒரு  திட்டமே இல்லாவிட்டால், என்ன ஆகியிருக்கும்? மற்ற நகரங்களைப் போல நமது தலை நகரமும், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களின் பொது, அழுக்காக, ஒழுங்கற்ற தெருக்களுடன், பொல்லியூஷன் மிகுதியான பஸ்களுடன்,குப்பையும் கூளமுமாக காட்சி அளித்திருக்கும். நமது விருந்தினர்கள் மத்தியில், நமது தலை நகரத்தைப் பற்றிய Picture  எப்படி இருந்திருக்கும்?


வெளி நாட்களிலிருந்து வரும் விளையாட்டு வீரர்கள் (தமிழில் "Player" என்பது எப்படி 'வீரனாகி'விட்டது? ) மற்றும் டிப்ளமாட்கள் மத்தியில் நமது கௌரவம் என்ன ஆகியிருக்கும்? அப்படியிருப்பது நமது CAG க்கு சம்மதமா?


சரி.. இம்மாதிரி, காமன் வெல்த் விளயாட்டு போட்டிக்காக தில்லியை கொஞ்சம் அழகு படுத்தப் போகிறோம் என முன்பாகவே CAG-ஐ கேட் டிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? வேண்டாம் என்றா? இன்னும் கொஞ்சம் முன்னே போய் காமன் வெல்த் விளையாட்டு நடத்தலாமா என்று கேட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? இந்த கேம் நடத்துவதால் 'ரிடர்ன்' ஒன்றும் இல்லை!  ஏகத்துக்கும் செலவாகும்! எனவே இந்த கேம் நடத்தவே அப்போது கூட வேண்டாம் என சொல்லியிருப்பாரா? மக்களப் பற்றி கவலைப்படும் CAG,  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து என்ன சொல்கிறார்?  


இப்போது தெளிவாகிறதா 'திட்டமிடுபவருக்கு-கணக்குப் பிள்ளைக்கும் உள்ள வேறுபாடு?


CAG  - UPA சார்பாக அல்லது NDA சார்பாக இருக்கிறார் என்று சொல்ல வில்லை!


அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தடுக்கும் உரிமை,  ஒரு கணக்குப் பிள்ளைக்கு இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் 'அரசியலாக்கிப் பார்ப்பது'  நமது தேசீய குணமாகிவிட்டது என்கிறேன். CAG-ன் ரிப்போர்ட் களும் இப்படி அரசியலாக்கப் படுகிறது.  திட்டமிடுபவர்களும் அதற்கான கணக்குகளை சரிபார்ப்பவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கும் அரசியல் 'முதிர்ச்சி' நம்மிடையே காணமல் போய்விட்டது தான் பரிதாபம்!



அரசியல் ரீதியான சண்டைகளை அரசியல் ரீதியாகத்தான் போராட வேண்டும். பிரச்சினை என்ன வென்றால் 'இந்தியாவில் ஒர் அரசியல் கட்சிக்கு மாற்றாக  இன்னொறு கட்சி இல்லை' என்பது தான்.  அவரவர் ஆட்சிக்கு வரும்போது அவரவர் கல்லா கட்டிக் கொள்வர்.  


நிங்கள் கணித்திருக்கக் கூடும் !  கொஞ்ச வருஷமாகவே நமது மக்கள் பிரதிநிதிகள், மக்களவையை நடத்த விடுவதில்லை. உருப்படியான விவாதங்கள் இல்லை. அட்டண்டென்ஸ் இல்லை. ஏதேனும் ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபடுவார்கள்.  விதி விலக்கு - கம்யூனிஸ்ட் கட்சிகள். சபை ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். நாமும் டி.வி சீரியல் பார்ப்பது போல இவர்களது டிராமாக்களையும் பார்த்துக் கொண்டிருப்போம்.  இந்த முறை பாராளுமன்ற கூட்டத்தொடரினை முடக்குவதற்கு BJP -க்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது - CAG.  அவ்வளவு தான்!!



எனவேதான் மக்கள், நமது அரசியல் அமைப்புகளிடம் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.  தங்களை காப்பாற்ற யாராவது 'CAG', 'Court', 'அன்னா ஹசாரே' போன்று எவரேனும் கிடைக்க மாட்டார்களா என அல்லாடு கின்றனர்.  



இவர்கள் எவரும் ஒரு மாற்று வழிமுறையினை காட்டவே இயலாது.  "அரசியல்"  மூலம்தான்,  "அரசியல் மாற்றம்" வரும்.  பொது நலத் தொண்டர்கள் அல்லது ஆசனம் சொல்லித் தருபவர்கள் மூலம் அல்ல. இவர்களால் ஒரு ஆரம்ப "ஜெர்க்" கொடுக்க முடியும். அவ்வளவுதான்.