நீண்ட நாட்களாகவே, சீரடி சென்றுவர வேண்டும்
என்று ஒரு எண்ணம் அவ்வப்போது தோன்றி மறையும். அவர் அழைக்கவில்லை; அவர்
அழைத்தால்தான் அவரைக் காணும் பாக்கியம் கிட்டும் என பலர் சொல்வார்கள். திருப்பதிக்கும் இதே வசனங்களைச்
சொல்வார்கள். ‘போகாமலிருப்பதற்கும்
அடிக்கடி போய்வருவதற்கும்’ இந்த வாசகங்களைச் சொல்லிக்கொள்வது வசதியானதுதான்
என்றாலும், அதில் எனக்கு உடன்பாடில்லை; தீர்மாணம், உந்துதல், முயற்சி, சந்தர்ப்ப
சூழ்னிலை ஆகியவையே யாத்திரைக்கு உகந்த காரணிகளாக எனக்குத் தோன்றும்.
நாம் இருவரும் சீரடிக்குப் போய்வரவேண்டும் என எனது நன்பர்
ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பல
பணிகளில் அகப்பட்டுக் கொண்டமையால், நான்
மட்டுமாவது சென்றுவர வேண்டும் எனத் தோன்றியது.
உண்மையில், எனக்கு சீரடி எந்த உந்துதலையும்,
போயே ஆகவேண்டும் என்ற தவிப்பையும் உண்டு பண்ணியதே இல்லை. ‘இண்டிகோ’ ஆஃபர் ஒன்று
வந்தமையால் பயன்படுத்திக் கொண்டு பயணத்திட்டத்தை இறுதி செய்தேன்.
காலை பத்தரைக்கு விமானம் புனே நகரின்
தரையைத்தொட்டபொழுது, பளீரென்ற வானிலை. புனேயிலிருந்து சீரடி செல்லும் நெருக்கடியான
சாலை. நான்கு வழிச் சாலைதான். எனினும் சீரடி செல்ல ஆறு மணி நேரம் பிடித்தது.
சீரடியை அடையும் பொழுது மாலை மணி ஐந்து. சற்றே
ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சீரடி கோயிலை அடையும் பொழுது மணி ஆறு. தரிசனத்திற்காக
காத்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகவேண்டியிருந்த்தது. என்ன ஒரு
கூட்டம்? திருப்பதி போல எங்கு திரும்பினாலும் மனிதத் தலைகளே! நிறைய பேர்கள்
ஆந்திராவிலிருந்து வருகிறார்கள். இருநூறு ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு சற்றே
முன்னால் சென்றேன்.
இதற்கு
முன்னால் சீரடி சென்று வந்தோர்களது அனுபவத்தைக் கேட்டுக் கொண்டு இங்கு வருவது
நல்லது. ஏனெனில், இந்த இடத்தில், பாபா
சமாதி கோயில், பாபா சம்ஸ்தான், சாவடி, த்வார்காமி,ஆஞ்சனேயர் கோயில், ம்யூசியம்,
கண்டோபா கோயில், லட்சுமிபாய் மந்திர், அவருடன் வாழ்ந்த பல மகான்களின் சமாதிகள் என பார்க்க/தரிசிக்க
பல இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களைப்பற்றிய அறிவிப்புப் பலகைகள்,
வழிகாட்டிகள் இல்லை. ஸ்பெஷல் தரிசன டிக்கட் (200 ரூபாய்) வாங்க எங்கே
செல்லவேண்டும் எனவும் அறிவிப்புகள் இல்லை. தர்ம தரிசன நுழைவாயில், ஸ்பெஷல் தரிசன
நுழைவாயில் போன்றவை எங்கே இருக்கின்றன என்பவை தெளிவாக இல்லை. ஒருவேளை இந்தியில் எங்கேயாவது
எழுதிவைத்திருக்கிறார்களோ என்னவோ? சமாதிகோயிலுக்குள் நுழைய மூன்று முக்கிய கேட்கள்
இருக்கின்றன. விசாரித்துக் கொள்ள வேண்டும்.
பாபாவிற்கு
பல்வேறுவகையான ஆரத்திகள், காலை
நான்குமுதல் (காக்கட ஆரத்தி) இரவு பத்துமணிவரை (ஷேஜ் ஆரத்தி)
நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆரத்தியும் இருபது நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஆரத்தியின் பொழுது, சர்வ பக்தர்களும் ஆரத்திப் பாடலை உடன் பாடிக்கொண்டு, பரவசமாய்
இருக்கிறார்கள். அதீதமான நம்பிக்கையும்
பக்தியும் இல்லாமல் இந்த நிலை சாத்தியமாகவே ஆகாது.
எல்லாக்
கோயில்களைப் போலவும் வழியெங்கும் நெருக்கியடித்துக் கொண்டு கடைகள். பூச்செண்டு
வாங்கச் சொல்லி வற்புறுத்தும் சிறு வியாபாரிகள்.
இவைகள் அனைத்தையும் தாண்டி கோயிலினுள் நுழையும் பொழுது, மகத்தான அமைதியும்,
நிம்மதியும், திருப்தியும் வழிந்தோடும்.
பாபாவைத்
தரிசிக்க மூன்று வரிசைகளில் அனுமதிக்கிறார்கள். இடது புறம், வலது புறம், நேரே என
மூன்று பாதைகள். மூன்று பாதைகளிலும் பாத தரிசனம் கிடைக்கும். இது தவிர த்வார்காமி,
முக தரிசனம் ஆகிய இடங்களில் பெரிய திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பும்
செய்கிறார்கள். சீரடி போனேன்; சரியாக தரிசனம் கிடைக்கவில்லை என்ற புகாருக்கே
வாய்ப்பில்லை.
மாற்றுத்
திறனாளிகளுக்கு சிறப்பு நுழைவாயில். இது தவிர ‘முக தரிசனம்’ செய்ய ஒரு இடம்
இருக்கிறது. அருகே சென்று தரிசிக்க
இயலாது; ஆனால் இந்த இடத்திலிருந்து தெளிவாக பார்க்க இயலும். நல்ல ஏற்பாடு.
மாலை
தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் காலை தரிசனம் செய்துவிட்டு, அருகே இருக்கும் மேலே
குறிப்பிட்ட, பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் தரிசனம் செய்தாயிற்று. திருப்பும் வழியில் பூட்டுகளற்ற ‘சனி சிங்க்னாப்பூர்’, ரேணுகாதேவி
கோயில் ஆகியவற்றைக் கண்டு ஊர் திரும்பினேன். நினைவில் நிற்கும் பயணம் .
Good. நானும் சென்று வந்தேன் . நான் போன அன்று அவ்வளவு கூட்டம் இல்லை இரு முறை தரிசித்தேன். சிக்னப்பூர் போகவில்லை .அஜந்தா எல்லோரா போனேன்
ReplyDelete