Monday, October 6, 2014

ஒரே நாள் இரவில்....


ஒரே நாள் இரவில் உலகு மாறிப்போனதேன்?
ஓராயிரம் உறவுகள் – சுற்றிவந்த பந்தங்கள்,
கல்லெறி பட்ட காக்கைக் கூட்டம்போல கரைந்து போனதேன்?

குதூகலமும் சந்தோஷமும்,
உற்சாக ஊற்றுக்களும் வற்றிப் போனதேன்?

ஒரே ஒரு நபர் இல்லாமல் போனபின்,
இல்லம் இருள் கொண்டதேன்?
மனம் மருள் பாவியதேன்?
உறவுகள் சுருள் கண்டதேன்?

கோளாறு என்மீதோ? எண்ணிப்பார்க்கிறேன்!
எனையொத்த அனைவரும் படும்பாடு இதுவே!

வாழ்க்கைத் துணை போனபின்,
கிழத்திற்கு எதற்கு தனி அடையாளம்?
எதற்கு தனிச் சுவை?
போட்டதைத் தின்றுவிட்டு,
புழக்கடையில் கிட!

இது என்னால் ஆகாது!

காயங்களில் பெரிது உதாசீனம்!
அவமானங்களில் பெரிது புறக்கணிப்பு!
வலிகளில் பெரிது துணை இழப்பு!
கொடுமைகளில் பெரிது முதுமையில் தனிமை!

முதியோர் இல்லங்களும்
அனாதை ஆசிரமங்களும் இல்லாமல் போனால்
எங்களுக்கு புளியமரத்தடிகள்தான் அடைக்கலமோ?

இராஜாவின் கிரீடம் காலால் இடறப்படுவது போல,
என் துணையை எமதர்மன் இடறிக் கொன்(றா)டான்!
சாக்கடையில் வீழ்ந்து கிடக்கும் பொழுதுதான்
புரிகிறது இழந்த கிரீடத்தின் மகிமை!

கழிவிரக்கமோ-சுயவிரக்கமோ அல்ல இது!
வாழ்வின் யதார்த்தமே இதுதான்.

உங்களுக்கெல்லாம் வயதாகாதா?

அவளில் புதைந்திருந்த நான்
அவள் மறைந்த்தும் – நானும் இறந்தேன்!
சவங்களுக்கான தெரசாக்காளோ, புளியமரங்களோ
இல்லாமலா போய்விடும்?

புரியவில்லை இனி - வாழவோ-சாகவோ?


No comments:

Post a Comment