Wednesday, May 28, 2014

கொஞ்சம் வெட்கமாய்த்தான் இருக்கிறது!

கொஞ்சம் வெட்கமாய்த்தான் இருக்கிறது!

டீன் ஏஜ் பருவத்தில் அதி உன்னதமாகவும், தலையாயதுமாகவும், அது இல்லாவிடில் வாழ்வே இல்லை என்ற பரிதவிப்புகள், கால ஓட்டத்தில், மெல்லத் தேய்ந்து, தற்போதைய நிலையில் அர்த்தமற்றுத் தோன்றுகிறது.

எனினும் அந்ததந்த பருவத்தில் அவை முக்கியமாய்த்தானே இருந்திருக்கிறது!

தத்துவ விசாரணைக்குள்  நுழையவில்லை! அது ஒருபுறம் இருக்கட்டும்.

தற்போது அற்பமாகத் தோன்றினாலும், சின்ன-சின்ன விஷயங்களுக்காக சிறு பிராயத்தில் எப்படி நடந்து கொண்டோம் என்பதை நினைத்துப் பார்த்தால் சற்று வெட்கமாய்த்தான் இருக்கிறது.

ஒரே ஒரு பாட்டில் “பியரை” திருட்டுத்தனமாக சுவைத்துப் பார்ப்பதற்காக பாத் ரூமில் பதுங்கிக் குடித்ததை நினைத்தால்;
(இந்த பாத் ரூம் சாதனைக்கு துணையாக இன்னொரு நன்பர் ஒருவர் – அவரும் இந்த பதிவைப் படித்துக் கொண்டிருக்கக் கூடும்)

பள்ளிப் பருவத்தில், அப்படி என்னதான் சிகரெட்டில் இருக்கிறது (ஜெய்சங்கரே பிடிக்கிராறே!) என்பதற்காக, ஏரிக்கரையில் எட்டிய தூரம் வரை சிசரையும்-வெட்டுப் புலியையும் எடுத்துக் கொண்டு ஓடியதை நினைத்து;

(புகைத்து முடித்தாலும் சொச்சமாக ஒரு மணி நேரம் நாற்றம் இருக்கும் என்பது தெரியாமல்-உதை வாங்கியது வேறு விஷயம்)

வாத்யாரின் சேருக்கடியில், ஊதுபத்தியினை செருகி, அதில் யானை வெடியினை கட்டிவைத்துவிட்டு, கதிகலங்கி உட்கார்ந்திருந்ததை நினைத்து;
(கடைசியில் அது வெடிக்காமல் போய் மாட்டிக் கொண்டது தனி கதை)

சுத்த சைவ வீட்டில் பிறந்துவிட்டு, மறைவாக கோழி முட்டை தின்றுவிட்டு, எங்கே அந்த முட்டை கோழிக்குஞ்சாக மாறி வெளியே வந்து விடுமோ என பயந்து, அடுத்த நாள் ஏரிக்கரையில் திரும்பிப் பார்த்துக் கொண்டதை நினைத்து;

“உரித்த கோழியாக” இன்று திரிவது சகஜமாகிப் போனாலும்,  கோழி இறகைப் பார்த்தே அன்று கிளர்ந்து போனதை நினைத்து;


“ஏண்டா, நான் பாக்கறதுக்கு எப்படி இருக்கேன்?” என எதிர் வீட்டு ‘அக்கா’ கேட்டதின் பொருள் புரியாமல் இருந்ததை நினைத்து;

உத்திரத்தின் மேலே ஏறி, பாம்பு பிடிக்கும் சுளுக்கினால், கீழே பாடி சுட்டு வைத்திருக்கும் தோசைகளை சுட்டுக் கொண்டு சென்றது பற்றி’
(பாட்டிக்கு ரொம்ப நேரமா சுட்டாலும், தோசை அடுக்கு ஏன்  நிறையவே இல்லை கடைசி வரைக்கும் புரியவில்லை)

நன்பண் ‘சங்கரன்’, எறி பந்து விளையாட்டில், என் முதுகில் குறிபார்த்து அடித்து விட்டான் என ஆத்திரப்பட்டு, அவன் பென்சிலைத் திருடி, அரச மரத்தடி பிள்ளையார் முன் போட்டுவிட்டு ஓடியதை நினைத்து;

எங்க மாமா MSEB – ல (தற்போதைய TNEB) வேலை பாக்கறார்னு புளுகி, செந்தாரப்பட்டி டூரிங் டாக்கீஸில் ஓஸியில் தரைடிக்கட் பாஸ் வாங்கி ‘தனிப்பிறவி’ பார்த்தது குறித்து;

இந்த தடவை அப்பளத்து மாவு காணவே இல்லை அம்மா சலித்துக் கொண்டிருக்க, டிராயர் பாக்கட்டில், நான் அடைத்து வைத்திருந்த, பிசைந்த அப்பளத்து மாவினை பாட்டி கண்டுபிடித்து விட்டார். அடி விழப்போகிறது என அஞ்சியபோது, சிரித்துக் கொண்டே, போடா.. போய் பெருமாள்கோயிலண்ட போய்த்திண்ணுட்டு வா ; அம்மா கிட்ட சொல்லலை போ என்றார்.  அப்பள மாவைக் கூட தின்றதை நினைத்து;

அண்ணனோட ரூம் மேட்கள் ‘சரோஜா தேவி’ என்று பேசிக் கொண்டதை, நான் எம்.ஜி.ஆர்-சரோஜா தேவி என நினைத்துக் கொண்டு, இரண்டாம் தடவை “அன்பே வா” பார்த்ததை நினைத்து;

சாமிக்கு படைக்கும் முன்னரே, நான் வடைகளை சுட்டுக் கொண்டதை நினைத்து;

பிள்ளையார் சதுர்த்திக்கு, நானே கொழுக்கட்டைகளுக்கு ‘சொப்பு’ செய்கிறேன் என வாலண்டியராகி, பூரணங்களை ‘லவட்டிக்’ கொண்ட்து குறித்து;

பள்ளியில், சைக்கிள் டியூபிற்கு மேல் போடப்படும் சிறிய ‘கவரை’ , களவாடி எனது சைக்கிளுக்குப் போட்டுக் கொண்ட்தை நினைத்து;

“பீம வலாஸ்” ஹோட்டலில், இட்லி, தோசை, பூரி எனத்தின்று விட்டு, நான் இட்லியும், தோசையும்தான் சாப்பிட்டேன் என சாதித்ததை நினைத்து;

தலையனை-பெட்ஷீட்டை செட் செய்துவிட்டு, இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்கு “ஓடியே”  போய் பார்த்துவிட்டு வந்ததை  நினைத்து;

கரும்பலகையில், எழுதும் போது, “வாய் கோணிக்கொள்ளும்”  ஒரு சமூகவியல் வாத்யார் என்னை அடித்ததால், அவரது சைக்கிள் ‘காத்தை’ பிடிங்கிவிட்ட்தை நினைத்து;

வீட்ல வாங்கியாரச் சொன்னாங்க என்று சொல்லி, மளிகைக் காரரிடம் ஒரு அணாவுக்கு பொட்டுக்கடலையும் – வெல்லமும் (அப்போதெல்லாம் எல்லோரும் மளிகைக் கடையில் கணக்கு வைத்திருப்பார்கள்) வாங்கித் தின்றதை நினைத்து;


படித்து முடித்துவிட்டு, ‘சினிமா பொரக்ஜக்டர் ஆபரேட்டராகவோ’ இல்லை “பரோட்டா மாஸ்டராகவோ” தான்  வேலை பாக்கனும்னு தீர்மாணித்ததை நினைத்து;

-இன்னும் அள்ள அள்ள குறையாத லீலைகளை, இப்பொழுது நினைத்துப் பார்த்தால்;


கொஞ்சம் வெட்காமாய்த்தான் இருக்கிறது

3 comments:

  1. don't worry. I did half of it.

    ReplyDelete
  2. அருமையான இளமைக்கால நினைவுகள்! நன்றி!

    ReplyDelete
  3. கொஞ்சம் இல்லே ,நிறையவே வெட்கமாய் இருக்கிறது !

    ReplyDelete