Friday, April 18, 2014

கு.பா அண்ணாச்சி!! நாம எப்பவுமே இப்படித்தாங்க!

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர். கு. பாலசுப்ரமணியன் நிற்கிறார்.

கு.பா என அன்புடன் அழைக்கப்படும் இவர், ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர். அரசு ஊழியர் சங்கப் பணிகளில், மாநில அளவில், பல்வேறு
பொறுப்புக்களை திறம்பட வகித்தவர். எளிமையானவர். எளிதில் அணுகக் கூடியவர். ஒரு உண்மையன தொழிற்சங்க வாதி. பண்பாகப் பழகக் கூடியவர். இவரை எனக்கு 25 வருடங்களுக்கு மேலாகத் தெரியும்.
இவரை ஆதரித்து இடது சாரி தொழிற்சங்க சிந்தனையாளர்கள் பலர் - அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் ஒருவருடன் நேற்று பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்ன தோழர், கு.பா தேர்தலில் எப்படியிருக்கிறார், கனிசமான வாக்கு கிடைக்குமல்லவா என வினவினேன்! கு.பா விற்கு வாக்கு கிடைக்கிறது அல்லது கிடைக்காமல் போகிறது, அதுவல்ல கவலை! நமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு கவலைதரக் கூடியதாகவே இருக்கிறது என்றார்.

கிராம வங்கி ஊழியர்களிடையே வாக்கு கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களுக்கு கு.பா என்றால்  யார் என்றே தெரியவில்லை என்றார்! இவ்வளவிற்கும், கடலூர்பகுதியில் கு.பா கலந்து கொள்ளாத தொழிற் சங்க இயக்கமே இல்லை!

அப்படியா? கம்யூனிஸ்ட் கூட நிற்கின்றனரா என நம்மிடமே கேட்கின்றனர் என்றார்.

இத்தனைக்கும் வங்கித்துறை, AIBEA – BEFI  போன்ற நெடிய வரலாறும், இடது சாரி பாரம்பரியமும் கொண்ட சங்கங்கள் கோலோச்சும் இடம். நிஜமான அரசியலைப் புரிந்து கொண்டிருக்க கூடும் என நம்பிக் கொண்டிருக்கும், இம் மாதிரியான  என்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களே இப்படியென்றால், மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் எனப் யூகித்துக் கொள்ள வேண்டியது தான்.

யோசித்துப் பார்த்தால், நாம் மீடியாக்களால் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை..  இந்த மகானுபாவர்கள் நிழல்களைக் காட்டியே நிஜமென நம்பவைத்துக் கொண்டிருக்கின்றனர். திரைக்கு முன்னால் நடப்பதற்கும்-பின்னால் நடப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருக்காது!

கட்சி களேபரங்களைத் தாண்டி ‘அரசியல் என்றால் என்ன?, அரசியலில் நிஜமான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? இந்திய அரசியல் அதிகாரம் யாரால் தீர்மாணிக்கப் படுகிறது? திரைக்குப் பின்னால் நடக்கும் சூத்திரங்கள், அதன் மூளையாக விளங்கும்  சூத்திரதாரிகள் யார்-யார் என்பது போன்ற தகவல்கள் உலகெங்கும் திறமையாக மறைக்கப் படுகின்றன! 

இந்த நிமிடத்திலேயே கூட பிரதமர் பதவி யாருக்கு போகவேன்டும், பாராளுமன்றத்தில் அவர்களால் தீர்மாணிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மெஜாரிட்டி பெருவதற்கு என்ன செய்ய வேண்டும்” *போன்றவை யாவும் தீர்மாணிக்கப்பட்டிருக்கும்.

நாம் மெல்ல மெல்ல சுரணையற்றுப் போய்க்கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டேயிருக்கிறது!

‘அரசியல்’ என்பது நமக்குப் போதிக்கப்படவே இல்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நமக்கில்லை. பல்வேறு எழுத்துக்களில் உலவும் கழகங்கள், காங்கிரஸ், பி.ஜே.பி, நடிக, நடிகையர் கூட்டம் நடத்தும் கோமாளிக் கூத்துக்கள் போன்றவகைளைத்தான் அரசியல் என நம்பிக் கொண்டிருக்கிறோம். நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் உண்ணும் ஒவ்வொரு வேளைச் சோற்றுக்குப் பின்னாலும்,

சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்குப் பின்னாலும்,

செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவுக்குப் பின்னாலும்,

நமது மகன்களின்/மகள்களின் படிப்பு &– வேலைகளுக்குப் பின்னாலும்,

நமது ஆரோக்கியம் மற்றும் மருத்துவ மணைகளுக்குப் பின்னாலும்,

நாம் விடாமல் விழுங்கிக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு மாத்திரைக்குப் பின்னாலும்,

எவ்வளவு சாப்பிட்டும் குணமாகாத வியாதிகளுக்குப் பின்னாலும்,

நாம் வாங்கிக் குவிக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும்,

கார், மொபைல், டி.வி, மற்றும் எல்லாவித FMCG க்குப் பின்னாலும்
‘அரசியல்’ மறைந்திருக்கிறது என்பது நமக்கு எப்போது புரியும்?

நாம் கண்ணால் கண்டுகொண்டிருக்கும் ‘அரசியல் தலைவர்களை’ ஆட்டுவிக்கும் மந்திரக்கயிறு யாருடைய பிடியில் இருக்கிறது என்பதை எப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்?

நாம் கெட்டது  போதாதென்று, நமது வாரிசுகளையும் வெகு சுத்தமாக ‘துடைத்துப் போட்டுவிட்டிருகிறோம்’!

‘படி-படி-படி-படித்து கொண்டேயிரு’ என்ற வேப்பிலை மந்திரத்தை, நமது வாரிசுகள் எட்டாவது படிக்கும் பொழுதே  துவக்கிவிடுகிறோம்; 

பத்தாவதை நெருங்கியதும், வேப்பிலைக் குச்சி, சவுக்காக மாறும். பிளஸ் டூ வில் ‘நல்ல’ மார்க்  எடுத்தாக வேண்டும். பி.ஈ சேர்ந்தபின் ‘கேம்பஸ்’ வந்தே ஆகவேண்டும். ஏதோ ஒரு சனியன் பிடித்த எம்.என்.ஸி யில் 20,000/- க்கு வேலைக்கு சேர வேண்டும். கார் வாங்க வேண்டும்! ஃப்ளாட் வாங்கி, கல்யாணம் முடித்து ‘செட்டிலாக வேண்டும்’ நமது   நோக்கமே அவ்வளவுதான்.

இப்படி வளர்க்கப்பட்ட இன்றய இளைஞர்களின் ‘சமூக பிரக்ஞை’ எப்படி இருக்கும்? கண்டதே காட்சி-கொண்டதே கோலம் என்று தான் இருப்பார்கள். விதையொன்று போட்டுவிட்டு – சுரையொன்றை எதிர்பார்த்தால் எப்படி?

‘பகத்சிங்’ போன்ற எண்ணற்ற தியாகிகளை இவர்களால் எவ்விதம் புரிந்து கொள்ள முடியும்?  ‘நாட்டு விடுதலை’ என்ற ஒன்றிற்காக மட்டும் லட்சக்கணக்கில் நிஜமாகவே செத்தார்கள் என்பதை உணர்வுபூர்வமாக தெரிந்து / புரிந்து  வைத்திருக்க முடியுமா?

ஒருவேளை, எத்தனை போராட்டங்கள் எங்கெங்கு நடந்தன, எப்பொழுது விடுதலைபெற்றோம், ‘எவ்வளவு பேர் விடுதலைப் போராட்டத்தில் செத்தார்கள் என்பவற்றை ‘ஸ்டாட்டிஸ்க்காக’ தெரிந்து வைத்திருக்கக் கூடும் – ‘குவிஸ் காம்படிஷனில்’ கலந்து கொள்ள, அதிலும் முதலிடத்தில் வருவதற்காக!

இந்த இலட்சணத்தில் நாம் இளைஞர்களை வளர்த்து வைத்துவிட்டு, நாமும் டி.வி மற்றும் ‘நெட்டில்’ மூழ்கிக் கிடக்கிறோம்.

மத்தியதர வர்க்கம், சமுதாயத்தில் இப்படி இருக்கிறது என்றால், மற்றொரு உழைக்கும் பிரிவினரை, ‘சாராயத்திலேயே’ திளைக்க வைத்துவிட்டிருக்கின்றனர். அன்றைய ‘குவார்டருக்கு’ சம்பாதித்தால் போதும் என்ற மன நிலையில்தான் பலர் இருக்கின்றனர்.

நமக்கெலாம்,

மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு  நல்ல சோறு இல்லையே – கவலையில்லை! 

இவ்வளவு இளைஞர் - இளஞிகள் வேலையின்றி தவிக்கின்றனரே – கவலையில்லை!

காக்காயைச் சுடுவது போல மீனவர்களை சுட்டுக் கொல்கின்றனரே – கவலையில்லை!

ஏழ்மையைப் பற்றி கவலையில்லை! ஏழையைப் பற்றி கவலையில்லை!

வடகிழக்கு மானிலங்கள் யாவும்  நமது ‘அரசாங்கங்களின்’ புண்ணியத்தில் தேங்கி நிற்கின்றனவே – கவலையில்லை!


விலைவாசி ஏறிக் கொண்டே போகிறதே – கவலையில்லை!

ஏன் விலைவாசி ஏறுகிறது? தெரியாது.

பன்னாட்டு கம்பெனிகள் ஏன் இந்தியாவை சுற்றி வருகின்றன – தெரியாது!

பங்கு மார்க்கட்டில் ஏன் புள்ளிகள் திடீரென ஏறுகின்றன – இறங்குகின்றன- தெரியாது!

லாபம் யாவும் எங்கு செல்கின்றன? தெரியாது!

உலக பொருளாதாரம், ஐ.நா, உலக வங்கி போன்ற சக்தி வாய்ந்த அமைப்புகள் யாவும் ஒருசில கம்பெனிகளின் கைப்பிடியில் இருக்கின்றன என்பதாவது தெரியுமா? தெரியாது!

உலகில் நடக்கும் போர்கள் யாவும், ஒரு சிலரால், திட்டமிட்டே நடத்தப் படுகின்றன என்பது தெரியுமா? தெரியாது!

சாதாரண மக்கள் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்படுகிறோம்? தெரியாது!

‘அரசியல் டிராமாக்கள்’ யாரால் வடிவமைக்கப்பட்டு – நிறைவேறப் படுகிறது? தெரியாது!


மீடியாக்கள்,  மக்கள் யாவரும்   ‘அரசியல் இருட்டை’ விட்டு வெளியே வராதபடி பார்த்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். கில்லாடிகள். எப்படியெனில் அனைத்து மாஸ் மீடியாக்களும் எம்.என்.சி க்களின் பிடியில். இவர்களுக்கு, மக்களை திசைதிருப்புவதில், மயங்கவைப்பதில்  உலகளாவிய அனுபவம் இருக்கிறது!

அப்படியே நாம் எப்பொழுதாவது  ‘வலி’ பொறுக்காமல்’ அலறினால் ஒரு ‘வடிகாலாக’ கேஜ்ரிவால்களை உருவாக்குவார்கள்! பின் அவர்களே ஏதாவது ஒன்றைக் கிளப்பிவிட்டு அவர்கள் உருவாக்கிய ‘கேஜ்ரிவால்களை’ அமுக்குவார்கள்.

அப்படியும் ஒரு சிலர், அரசியல் சூத்திரதாரிகளின் தந்திரங்களைப் புரிந்து கொண்டு, போராட தெருவில் இறங்கினால்,  மக்களை திசை திருப்ப, அரசியல் அதிகார மையங்கள் சில ஃபார்முலாக்களை கைவசம் தயாராக வைத்திருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ஃபார்முலா தோற்றதேயில்லை!

அது என்ன ஃபார்முலா என்கிறீர்களா? அதுதான் ‘மத’, ஜாதி’, இன கலவரங்கள்.

எளிதில், சட்டென உணர்ச்சி வயப்படும் நமது ‘கலாச்சாரத்தை’ மிகச் சரியாகவே கணித்து வைத்திருக்கின்றனர், இந்த சூத்திரதாரிகள்.

இந்த தேர்தல் ‘டிராமாவும்’ அடுத்த மாதம் முடியும்.

நாட்டில் செல்வம் பெருகும் தான். பெருகும்  நாட்டின் செல்வமனைத்தும் ஒரு சிலர் கையில் குவிந்து கொண்டேயிருக்கும். ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருப்பார்கள்.

நாமும் டீக்கடை பெஞ்சுகளில், ஆபீஸ் வராண்டாக்களில் ‘அரசியல்’ பேசி பொழுதைக் கழித்துவிட்டு, வீட்டிற்குப்போய் டி.வி யில் மூழ்கி, அஜித்தின் அடுத்தபடம் என்ன என்பதிலோ, ‘கோச்சடையான்’ என்னவானான் என்பதிலோ மூழ்கிப் போய்விடுவோம்.


இன்று வசதியாக இருப்பதாக பாவித்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினரே – உணர்ந்து கொள்ளுங்கள் -  பொருளாதார நெருக்கடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது! ஏனெனில் நாம் தேர்ந்தெடுத்துள்ள அரசியல் பாதையின் தன்மை அத்தகையது!

இவற்றை யார் உணராவிட்டாலும் பரவாயில்லை!

புரிந்து கொண்டிருக்கும் இடது சாரிகள் இனியாவது தங்களது யுக்தியை சீரமைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது! ஆனால், இந்தியாவில் இடது சாரிகள் பிளவுண்டது போல வேறு எந்த இயக்கமாவாது பிளவுபட்டிருக்கிறதா என்ன?

அப்பப்பா...!   எத்தனை குழுக்கள்? எத்தனை கட்சிகள்? ஒரே கட்சியில் (இடது சாரிகளைத்தான் சொல்கிறேன்) எத்தனை கோஷ்டிகள்?

குறைந்த பட்சம், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) இணைந்து ஒரே கட்சியானால் என்ன குடி முழுகிப் போய்விடும்? அரசியலில் 1+1 என்பது எப்பொழுதும் இரண்டு அல்ல! விடை 10 எனவும் வரும்! ‘0’ எனவும் வரும்!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவே தெரியாத ‘மக்கள் ஜன நாயகம் / தேசிய ஜன நாயகம்’ நிகழ்ச்சி நிரலை ஒத்திவைத்து, ஒரே கட்சியாக மாறினால், விடை தானாகத் தெரிய ஆரம்பிக்கும்!

அப்ப நமக்கு விடிவு காலமே இல்லையா என்கிறீகளா?

இல்லை! அது தான் உண்மை! அரசியல்-சமுதாய மாற்றம் வேண்டும் என்ற உணர்வு-வேட்கை-வெறி மக்களுக்கு வந்தால்தான் விடிவு!

அதுவரை? 

நமது துயரங்களை / போராட்டங்களை மறக்க வைக்கும் / மழுங்க வைக்கும் ‘ஜாதி’, ‘மதம்’, ‘மீடியா (சினிமாவும் -கூடத்தான்)’, ‘செக்ஸ்’ போன்ற ‘அபின்களுக்கு’ த்தான் நாட்டில் பஞ்சமேயில்லையே! இவற்றில் நாம், குட்டையில் ஊறும் ஒரு ஜந்து போல  மூழ்கிக் கிடக்கலாம்!

நம்மில் கணிசமானோர் மேற்சொன்ன வகையில் (எல்லோரும் அல்ல) இருக்கும்வரை திருடர்களுக்கு கவலையில்லை!  ‘கு.பா’ கிடக்கிறார்! விட்டுத்தள்ளுங்கள்! அவர் ஜெயித்தால் என்ன? தோற்றால்தான் என்ன? யார் எப்படிப் போனால் நமக்கென்ன? 


6 comments:

  1. உண்மையான கவலை இதுதான் சார்.. உலகெங்கும் இதே போலத்தான் மக்கள் நசுக்கப் படுகிறார்கள். இரண்டு வருடம் முன் துனிசியாவிலும் எகிப்திலும் வெடித்த புரட்சி அப்படியே பல நாடுகளுக்கு விடிவு காலமாக அமையும் என்று பார்த்தால்... எகிப்தை பொறுத்தவரை அதே பழைய குருடி கதவை திறடி கதை.. துனிசியா கொஞ்சம் பரவாயில்லை போல இருக்கிறது.. ஆனால் உலகளாவிய புரட்சி.. அப்படியே அமுங்கி விட்டது..

    நம் ஊரில் என்னவென்றால் யார் எப்படிப் போனால் என்ன.. என் வரையில், என் குடும்பம் வரையில் நன்றாக இருந்தால் போதும் என்ற சொரணை கேட்ட அடுத்த தலைமுறையை வளர்த்திருக்கிறோம் (வளர்ந்திருக்கிறோம்). இது எப்போது மாறும் என்பதை விட எப்படி மாறும் என்பதே பெரிய கேள்விக் குறி!

    கண்ணுக் கெட்டியவரை விடிவுகாலம் தெரியவில்லை. இதை மாற்றும் துணிச்சலும் நேர்மையும் உள்ளவர்களே தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து கிடந்தால் எப்படி மாறும்?

    ReplyDelete
    Replies
    1. எகிப்தில் ஏதாவது மாற்றம் வரும் என உனையிலேயே எதிர்பார்த்தேன்! ப்மச்... மொந்தை தான் புதிது! சர்வதேச முதலாளிகளின் அரசியல் நுணுக்கம்,தந்திரம், மக்களை மயக்கும் வேலை - இவற்றை மீறி ஒன்றும் நடவாது போலிருக்கிறது!

      Delete
  2. இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலேயே மாற்றி மாற்றி சவாரி செய்து வந்ததால் வந்த வினை இது! இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் நல்லவர்களாக நன்கு அடையாளம் காணப்பட்டவர்களாக இருந்தாலும் பாதிப்பு இடது சாரி கட்சிகளுக்குத்தான்! அவர்கள் தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது!

    ReplyDelete
  3. சரிதான் 'தளிர்' சுரேஷ்! 'அம்மா' வெளியே துரத்தியிருக்காவிடில் 2+2 -ல் திருப்தியடைந்து விட்டிருப்பார். 'கேஜ்ரிவாலால்' ஜெயிக்கும் பொழுது, இடது சாரிகளால் வெல்ல முடியவில்லை (மக்களின் மனதைச் சொல்கிறேன்) என்பதை இனியாவது அராய்வார்களா?

    ReplyDelete
    Replies
    1. தா. பா . போடாத ஜால்ராவா அம்மாவுக்கு . ஒரு ராஜ்யசபா உறுப்பினர் ஆனோமே எப்படி ? இவர்களே இப்படி அப்புறம் சாதாரண மனிதன் எப்படி இருப்பான் ? தளிர் சுரேஷ் சொல்கிரதுபோல் நல்லவரா ? அரசியியலிலா ? சாத்தியமே சந்தேகம்தான்

      அரசு

      Delete
  4. நானும் ஐம்பதுகளில், அறுபதுகளில் சோஷியலிசம்/கம்யுனிசம் மேல் மிக எதிர்பார்ப்பு வைத்து இருந்தவன் தான். சோஷியலிஸ்டுகள் பல பின்னங்களாக உடைந்து அந்த வார்த்தையே இல்லாத கட்சிகளாக இருக்கிறார்கள் (Janata Dal (U), (S), etc. கம்யூனிஸ்டுகள் இடது, வலது என்று பிளந்ததோடு நிறுத்திக்கொண்டாலும் ஒவ்வொரு தேர்தலிலும் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகிறார்கள். ரஷியாவும், சீனாவும், பிற கம்மயூனிஸ்டு நாடுகளும் தங்கள் கொள்கைகளை மறு பரிசீலனை செய்து மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்; ஆனால் நம்மூர் சிவப்பு துண்டுகளோ வர்க்கப் போர் ,சுரண்டல் என்று அதே கதை பேசிக்கொண்டு உள்ளனர். கம்ம்யூனிஸ்டுகள் நாற்பது ஆண்டுகள் ஆண்டு மேற்கு வங்கத்தை வளர விடாமல் செய்யவில்லையா ? ( நில சொந்தக்காரர்கள்/குத்தகை தாரர்கள்/ விவசாயக் கூலிகள் என்ற மிகச் சிலவற்றில் சீர்திருத்தம் செய்து இருந்தாலும்,) சிறு தொழில்,பெருந்தொழில், சேவைகள் (Services) முதலிய வற்றில், கல்வி, ஆங்கிலக்கல்வி, ஆகியவற்றில் தம் கொள்கைகளை புகுத்தி அவை வளராமல்/நசித்து செய்த பெருமை அவர்களையே சாரும். , , ஹோட்டல்களிலும், கட்டிட வேலையிலும் வங்க தொழிலாளர்களை தென் இந்தியாவில் நாம் காண்பதே அங்கு வேலை இல்லாமைக்கு சான்று. கேரளாவில் கூட மரவள்ளிக்கிழங்கு போன்றவை பயிரிடுவது அதிக செலவு (மிக அதிக கூலி )ஆவதால் சேலத்தில் இருந்து இறக்குமதி ஆவதாகச் சொல்கிறார்கள். மொத்தத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா (வலது சாரி), கம்யூனிஸ்டுகள் இடது சாரி என்று இரு கட்சிகள் இருந்தால் நலமாக இருக்கும். வர மாட்டேன் என்கிறது.

    ReplyDelete