மனைவியின்
சிகிச்சைக்காக, நாளை (22/06/12), சென்னை செல்ல, வேண்டிய ஏற்பாடுகளைச்
செய்துவிட்டு, மன நிம்மதி வேண்டி, “சுகி சிவம்” அவர்களது புத்தகங்களை புரட்டிக்
கொண்டிருந்தேன். அவருடைய புத்தகங்களின்
விசிறி நான். பொதுவாக மனம் அதைரியப்படும் போதெல்லாம், பாரதியையும், சுகி சிவத்தினையும் புரட்டுவது
வழக்கம்.
அவ்வாறு நான்
புரட்டிய, ஒரு சுகி சிவத்தின் புத்தகத்தின், ஒரு கட்டுரையில் நமது பெரும்பாலான
மனத் துயர்களுக்கு, நமது “மனம்” தான் காரணம் என்று சொல்லி, ஒரு சிறிய கதை ஒன்றையும்
சொல்லியிருந்தார்.
கதைகளைச் சொல்லி, தத்துவங்களை விளங்க வைப்பதில், பரமஹம்சருக்கு இணை
அவரே; என்றாலும் திரு.சுகி சிவம் சொல்லிய
இக்கதையில், வரிகளுக்கிடையே புரிந்து கொள்ள வேண்டியது, விளங்கிக் கொள்ளவேண்டியது
நிறைய இருப்பதாகத் தெரிந்தது. எனவே அக் கதையினை
கீழே கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------------------------
அவன் மனைவி இறந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் மிகவும் பயந்தபடி உட்கார்ந்திருந்தான் கணவன். பயத்திற்குக் காரணம், மனைவியின் மரணம் அல்ல! அவனை “எல்லாவற்றிற்கும் தன்னிடம் பயப்படுமாறு” பழக்கி வைத்திருந்தாள் அவள்.
இறுதித்தருவாயில், கண்ணைத் திறந்து விழிகளை உருட்டி, கை விரலை உயர்த்தி
மேலும்-கீழும் ஆட்டி, ‘நான் இறந்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம் என கனவு காண
வேண்டாம். நடக்காது! நடக்க விட மாட்டேன். இறந்தாலும் பேயாக வந்து கண்காணித்துக்
கொண்டிருப்பேன்; என்னிடம் எதையும் மறைக்க முடியாது! ஜாக்கிரதை!” என
மிரட்டிவிட்டு மாண்டுபோனாள்.
கொஞ்ச நாள் வீட்டிலேயே அடைந்து கிடந்த அவன், பின் ஒருவாறு தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு, அலுவலகம் போனான். மாலை, அவனது விருப்பப்படியே சற்று மது
அருந்தி, சுதந்திரத்தை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்தான். வீடு திரும்பிய அவனுக்கு பேரதிர்ச்சி
காத்திருந்தது! சோஃபாவின் மேல், கால்மேல் கால் போட்டபடி அமர்ந்து கொண்டிருந்தாள்
அவன் மனைவி! சப்த நாடியும் ஒடுங்கியது! வியர்த்துக் கொட்டியது!
“ஓஹோ... நான் போய்விட்டேன் என்று துணிச்சல் வந்து விட்டதா? தண்ணி அடித்துவிட்டு வந்தாயா? இனி நான்
அடிக்கடி இப்படி வருவேன். உன்னை ஒவ்வொரு
வினாடியும் கண்காணித்துக் கொண்டிருப்பேன். நினைவிருக்கட்டும்! நீ என்னிடம் எந்த
தவறையும் மறைக்க முடியாது! இது உனக்கு எச்சரிக்கை” என்று சொல்லி
மறைந்து போனாள்.
இந்த கணம் முதல், இவன் நிம்மதி இழந்தான். சாப்பிட முடியவில்லை! தூங்க
முடியவில்லை! யாரோடும் பேச முடியவில்லை!
அடுத்தடுத்து, ஒவ்வொரு நாளும், அவள் வருவது தொடர்ந்தது!
அவன் மனதில் நினைத்த எல்லாவற்றையும் சொன்னாள்! இன்று எதற்காக, ரோடில்
போகும் பெண்ணைப் பார்த்து ‘ஜொள்’ விட்டாய்? என மிரட்டினாள். அவன் மனதில் தோன்றிய அனைத்து
சபலங்களையும் குத்திக்காட்டினாள்.
“என்னிடமிருந்து விடுதலை அடைந்து விட்டதாக
நினைப்பா? நான் எப்போதும் இங்குதான் இருக்கிறேன். உன் விடுதலை பற்றி கனவு கூட
காணாதே” என்றாள். அது
மாத்திரமல்ல! அவனுக்கு எல்லாவிதமான யோசனைகளையும் சொல்ல ஆரம்பித்து விட்டாள். இவளை
என்ன செய்வது எனக் குழம்பிப் போனான். அவள் இவனை அடிக்கவில்லை, கடிக்கவில்லை,
சினிமா பேய் போல ஆர்ப்பரிக்க வில்லை! ஆனால் அவனது சுதந்திரம், சுத்தமாக
பறிபோயிற்று!
இறுதியில், ஒரு ஜென் குருவிடம் சரண் அடைந்தான். ‘இருக்கும் போதும், என்னை
பாடாய் படுத்தினாள்; இறந்த பின்னும் சித்தரவதை செய்கிறாள்” ஏதாவது வழி
செய்யுங்கள்” என காலில் விழுந்தான்.
குரு சிரித்துக் கொண்டே, கூழாங்கற்கள்
நிரம்பிய சிறிய பை ஒன்றைக் கொடுத்தார். இதைப் பிரித்துப் பார்க்காதே! இன்று
இரவு உன் மனைவி வந்ததும், இதில் எத்தனை கூழாங்கற்கள் இருக்கிறது என்று கேள்.
அவள் ஒரு எண்ணைச் சொன்னதும்,
பையைத்திறந்து கற்களை எண்ணிப்பார். சரியாக இருந்தால் வந்து என்னைப் பார்.
ஆனால் கவனம்... நீ என்னைப் பார்த்த்தைக் கூட சொல்லுவாள்.
அதைப்
பொருட்படுத்தாதே! பையில் எத்தனை
கற்கள் இருக்கின்றன என அதட்டிக் கேள்” என்றார்.
வீடு திரும்பியதும் வழக்கம் போல, அவன் மனைவி வீற்றிருந்தாள். “என்ன, அந்த
மடையன் குருவினைப் பார்த்து விட்டு வருகிறாயா? என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்று
கருவினாள். ஆனால், குரு சொல்லிக் கொடுத்தபடி, “அதிகம் பேசாதே.. வாயை மூடிக்கொள்..
இந்தப் பையில் எத்தனை கற்கள் இருக்கின்றன என்று மட்டும் சொல்” என
மிரட்டினான். என்ன ஆச்சரியம்? அடுத்த கணம்
அவள் மறைந்து விட்டாள். அது முதல், அவள்
அங்கே இல்லை; வருவதும் நின்று விட்டது.
வியந்து போய், மீண்டும் ஜென் குருவிடம் சென்றான். “என்ன மந்திரம்
செய்தீர்கள்?” அவள் வருவதை நிறுத்தி விட்டாள் என்றான்.
குரு பையைத் திறந்து, கீழே கொட்டினார். அவர் சொல்லியபடி வெறும் கூழாங்கற்கள்தான் கீழே கொட்டியது!
பின் சொன்னார். ‘உன் மனைவியின் வரவு உன் மனதின் தினிப்பு. மன மாயை. மனதின்
சேட்டை. அவளை தினித்ததும், வரவழைத்த்தும்
நீ தான். உன் மனது தான். உன்
எண்ணத்தை, உன் சிந்தனைகளை அவள் மீது திணித்துக் கொண்டு நீயே கஷ்டப்பட்டாய். பையில்
எத்தனை கற்கள் இருக்கின்றன என்று உனக்கே தெரியாது! எனவே அவளுக்கும் தெரியாது!”
“உனக்கு என்ன தெரியுமோ, அவை மட்டுமே அவளுக்குத் தெரியும். உனக்கே தெரியாதது
அவளுக்கும் தெரியாது! காரணம், அவள் உன்
உருவாக்கம்... உன் மனதின் திணிப்பு. அந்த
மாயை உடைந்துவிட்டது. இனி நீ நிம்மதியாக
இரு போ.. ஆன்ந்தமாய் தூங்கு” என்றார் குரு!
பெருவாரியான மனிதர்கள் துன்பப்படுவதற்குக் காரணம் அவர்களது மனமே!. மனதின் கற்பனை, உருவாக்கம், திணிப்பு, ஆழ்மனத்தின் சேட்டையே பலரது துயரங்களுக்குக் காரணம். துன்பத்தினை வெல்ல, மனத்திலிருந்து, நமது திணிப்புக்களை நம்மால் வெளியேற்ற முடியும்.
-----------------------------------------------------------------