Pages

Saturday, March 12, 2016

A night to remember - மஹாசிவராத்திரி விரதம் 2016

2016 வருடத்திய, மஹாசிவராத்திரி விரதம் (07/03/2016) ஹோசூரில் அனுசரிக்கும்படியாயிற்று.  மாசி மாத தேய் பிறை சதுர்த்தசி, அதாவது  ‘மகா சிவராத்திரி’ அன்று ஹொசூர் திமிலோகப்பட்டது என்றே சொல்லலாம்.  மக்கள் அவ்வளவு உற்சாகமாக இரவு நிகழ்ந்த அனைத்து அபிஷேக - ஆராதனைகளிலும் கலந்து கொண்டனர். அங்குள்ள ஒரு சிறுமலையில், “சந்திரசூடேஸ்வரர் சிவன் கோயிலில், இரவு நேர நான்குகால பூஜையிலும் கூட்டம் அலைமோதியது.

மற்ற அனைத்து  சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும், இது ஒரு சேர வழங்குவதால், இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டுமாம்.  சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைக் காண வேண்டுமாம்.

சிவராத்திரி என்ற சொல்லே வீடு பேறு தரும் நாள் என்றுதானே பொருள் பெறும்? இப்புன்னிய நாளில் ருத்ரம் சொல்வதும், இரவு கண்விழித்து நான்கு கால பூஜைகளில் பங்குபெறுவதும் கொடுப்பினையாகும்.
ஈஸ்வரனுக்குரிய திதி சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகா சிவராத்திரி  ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில், உபதேசம் செய்த புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிப்பது மிகவும் விஷேஷமானது. மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். ஈஸ்வரியின் தவத்தின் பலனாக சிவபெருமானும் சம்மதித்தார். மேலும் இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்எனவும் அருளினார்.

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து, இறைவனை வணங்கும் பேறும் பெற்றேன். ஆனால் விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யது, வேண்டுமாம். இது ஓரளவிற்கே கைகூடியது.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் அனைத்து பாவங்களும் அவை நம்மை விட்டு நீங்குமாம். நீங்குகிறதோ இல்லையோ, இனி பாபம் செய்யாமலிருக்க சங்கற்பம் மேற்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தானே?
வீட்டின் அருகே ஒரு கோயில். ருத்ராட்ச அலங்காரம்.
காலை ஈஷா மையத்திலிருந்த ஒரு மெயில் எப்பொழுதும் போல வந்திருந்த்தது. வெறுமனே விழித்திருக்கும் இரவாக இல்லாமல், விழிப்புணர்வு அடையும் இரவாக மஹா சிவராத்திரியை அமைத்துக் கொள்ளுங்கள் என அறிவுறித்தியிருந்தார் ஜக்கி. மாலை முதலே ஈஷா மையத்தில், கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. இசை விற்பன்னர்கள் பலர் பல்வேறுவிதமான இசை, நடன, நாட்டிய, யோக நிகழ்ச்சிகளை இரவு முழுவதும் நடத்திக் காட்டினர். ஆனந்த அனுபவம்.
உச்சமாக, ஜக்கி அவர்கள் உங்கள் அனைவரையும் (கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களிடம்) ஒரு 20 நிமிட நேரம் உலகை மறந்து ஈசனிடம் லயிக்கச் செய்யட்டுமா என வினவி, சில அப்பியாசங்களையும், ஜபங்களையும் சொல்லச் சொல்லி அனைவரையும் த்யான உலகிற்கே அழைத்துச் சென்றுவிட்டார். தொலைக் காட்சியில் அதனை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்ததாலும், அவரிடம் எனக்கு ஈர்ப்பு அதிகம் என்பதாலும் எனை மறந்து அவரைப் பின்பற்றிக் கொண்டிருந்தேன்.
எனது தமையனாரின் மூத்த மருமகனிடம் நான், சந்திரசூடேஸ்வரர் மலைக் கோயிலுக்கு வருவதாகச் சொல்லி யிருந்தேன். இரவு 12 மணி பூஜைக்கு எனை அழைத்துச் செல்ல விரும்பி தொலைபேசியில் அழைத்திருக்கிறார். நானோ ஜக்கியிடம் லயித்து உலகை மறந்திருந்தேன். பாவம். அவர் அழைத்துச் செல்ல நேராகவே வந்துவிட்டார். சங்கடமாகப் போய்விட்டது! என்ன செய்ய?
எனினும் அன்று அனைத்து இரவுப் பூஜைகளிலும், அந்த ஊரின் வெவ்வேறு சிவன் கோயில்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கச் செய்ததற்காக ஈசனுக்கு ‘ஸ்பெஷல்’ நமஸ்காரம்.



No comments:

Post a Comment