Pages

Friday, September 25, 2015

முந்திச் செல்வோம்....

சில வருடங்களுக்கு முன்னால், சபரிமலைக்குச் சென்றிருந்த பொழுது, சன்னிதானத்திற்கு நுழைவதற்கு முன்னால், எல்லாக் கோயில்களையும் போல, வளைந்து-வளைந்து செல்லும் இரும்புக் கிராதிகள் போட்டு வைத்திருந்தார்கள். இப்பொழுதும் அப்படியே! அதுசமயம், பகல் 11 மணியிருக்கும். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒரு நபர், கிராதிகளுக் கிடையே புகுந்து முன்னேற, அதைப் பார்த்துவிட்ட ஒரு போலீஸ்காரர், அவரை உதைத்து வெளியேற்றினார். ஆனால், நீல வேட்டி உடுத்திக் கொண்டு, பூஜை சாமன்களையும் வைத்துக்கொண்டு உதை வாங்கியதை, அந்த நபர், ஒரு பொருட்டாகவே  நினைக்கவில்லை.

(இரும்புக் கிராதிகளின் இடையே நின்று கொண்டிருக்கும் எதேனும் ஒரு பக்தருக்கு, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவரை உடனடியாக வெளியே கொண்டுவருவது கூட இயலும் காரியம் இல்லை. திருப்பதி கூண்டுகளிலும் அப்படித்தான். கூண்டுகளுக்குள்ளும் உதவி வரும்.. தாமதமாக. அதற்குள் அவர் உயிர் பிழைத்திருக்க ஆண்டவன் அருள வேண்டும்.)

சென்றவாரம் பெங்களூர் சென்றிருந்த போது, போக்குவரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஆம்புலன்ஸின் சைரன் ஒலித்துக் கொண்டே இருந்தது, 20 நிமிடங்களாக. உள்ளுக்குள் இருக்கும் நோயாளி என்ன ஆனாரோ தெரியவில்லை. எவரும் ஒதுங்குவதாகவோ, வழிவிடுவதாகவோ தெரியவில்லை. பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் உலகப் பிரசித்தம். இரண்டு கிலோமீட்டர் தொலைவே உள்ள ஒரு இடத்தை அடைய 10 நிமிடம் ஆனாலும் ஆகும், மூன்று மணி நேரம் ஆனாலும் ஆகும். அன்பிரடிக்டபிள் டிராஃபிக். ஆம்புலன்ஸின் சைரன் குறித்து எவருக்கும் எந்த பதற்றமும் இல்லை. சாவதனமாக டிராஃபிக் ஊர்ந்து கொண்டிருந்தது. ஏர் லிஃப்டிங் எல்லாம் கனவுதான். 

சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்றிருந்தேன். அங்குள்ள 22 நாழிக் கிணறுகளில் குளிப்பதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு தெலுங்கு ஆசாமி எகிறிக் குதித்து, முன்னே போய் கிணற்றின் மேல் நின்று கொண்டு, தீர்த்தம் ஊற்றிக் கொண்டிருப்பவர் முன் தலையை நீட்டினார். தீர்த்தம் ஊற்றிக் கொண்டிருந்தவர், இந்த நபர் வரிசை தாண்டி வந்ததைக் கண்டு எரிச்சலாகி, ‘பக்கட்டாலேயே’ அவரை ஒரு மொத்து மொத்தினார். அடி வாங்கியவர் அதைப் பற்றி கவலையே படாமல், ‘அடியுடன்’ கூட, கொஞ்சமாக கிடைத்த தீர்த்தத்தை பெற்றுக் கொண்டு, அடுத்த கிணற்றிற்கு பாய்ந்தார்.

2011-ல், சபரிமலையில், ஜனவரி 14 அன்று நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

கும்பமேளாக்களில் நெரிசல் சாவு சகஜம்.

தற்போது, ஹஜ் பயணத்தில், ஜன நெருக்கடியில் சிக்கிக் கொண்டு  பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வளவு கூட்டம் வரக்கூடும் என்பதை எதிர்பார்த்து, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் அரசு தரப்பில் சுணக்கம், நெரிசல் இறப்புகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

ஆனால், உதாரணத்திற்காக மேற்சொன்ன சம்பவங்கள் யாவற்றிலும், தான் ‘எப்படியாவது தான் முதலில் சென்றுவிடவேண்டும்’ என்ற நமது மனோபாவம் முக்கிய காரணமாகிறது.

எவ்வளவு கூட்டம் இருந்தாலும், மற்றெல்லோரையும் தள்ளிவிட்டு, ‘முந்திச் சென்று’ சடங்குகளை முடித்துவிடும் அவசரம் / தெய்வ தரிசனம் செய்துகொள்ளும் அவசரம் இல்லாமலிருந்தால், பல துயர சம்பவங்களை தவிர்த்து இருக்கலாம். பல சமயங்களில் வெறும் வதந்தி கூட  நெரிசலை தோற்றுவித்து, பலர் உயிர் இழக்க காரணமாகியிருக்கிறது.

துரதர்ஷடவசமாக ‘சுய ஒழுங்கு’  நம்மிடையே அருகிக் கொண்டே இருக்கிறது.  தனி நபராக ஒழுங்காக செயல்படும் சிலர், கூட்டமாகிவிடும் பொழுது, எப்படியாகிலும் ‘முந்திச் செல்லும்’ மனோபாவத்தை பெற்றுவிடுவதை விட்டொழிக்க முடியவில்லை.

லேன்ட் ஆகியதுமே, கேபினிலிருந்து ஹேண்ட் லக்கேஜ்களை ஏன் உருவ வேண்டும்? இடித்து பிடித்து கதவருகே கலவரம் ஆவதேன்? எல்லோரும் இறங்கியபின், மீண்டும் ஆட்களை ஏற்றிக்கொண்டு தானே டேக்ஆஃப் ஆகும்?

டெர்மினல்  ஸ்டேஷன் என்று தெரிந்தாலும், ரயிலை விட்டு இறங்க கதவருகே எல்லா லக்கேஜ்களையும் அடுக்கி ஏன் வழிமறிக்கனும்?

பெங்களூர் போல கனத்த போக்கு வரத்து நகரமாக இருந்தாலும் கூட, வாகன ஓட்டிகள், ஒழுங்கைக் கடைப்பிடித்தால், இவ்வளவு சிரமம் ஏற்படாதல்லவா? அவரவர் அவரவர் லேன்களில் சென்று கொண்டி ருந்தாலே கனிசமாக நெருக்கடி குறையுமே? இது எல்லோருக்கும் தெரிந்தும்கூட ஏன் கடைபிடிக்க மறுக்கிறோம்?

தனிநபராக, நிதானமாக-ஒழுங்காக இருப்பது நிஜமா இல்லை கூட்டத்தில் அடித்துப் பிடித்து ஓடுவது நிஜமா? எது ஒரிஜினல் குணாதிசயம்?
சமுதாயமாக, நமது சைக்காலஜியை மாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா எனத் தெரியவில்லை.

சக பிரயாணிமேல், சக யாத்ரீகர்கள் மேல் நாம் கொள்ளும் அக்கறை, வேறெந்த மதச் சடங்குகளையும் விட ‘புன்னியமானதே’. சக மனிதனை நேசிக்கத் துவங்கிவிட்டோமானால்,  நாட்டில் அமைதியே நிலவும்.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பவர்களாவது க்ரௌட் சைகாலஜியைப் புரிந்து கொண்டால் நல்லது.


No comments:

Post a Comment