Saturday, April 1, 2017

“ரெட்” பஸ்.

தாராளமயமாக்கல் உலகில், பொதுத் துறை நிறுவனங்கள் என்றாலே, ஒரு அசூயையுடன் பார்க்கும் காலம் இது. அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்; சதா சம்பள உயர்வுகேட்டு போராடுவார்கள்; தரமான சேவை இருக்காது... போன்ற இத்யாதி அபிப்ராயம்தான் பொ.து நிறுவனங்கள் மீது.

இதில் ஏதும் உண்மையில்லை என வாதிடலாகாது.  பெரும்பாலும் சேவைக்குறைபாடுகள் நிறைந்ததுதான். ஆனால் தனியார் நிறுவனங்கள்  யாவும் உத்தம புத்திரர்கள் அல்ல.

ஆனால், இப்போது சொல்லவிருப்பது BSNL ஐப்பற்றி அல்ல. தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களைப் பற்றியது.
நேற்று, கடலூரிலிருந்து, ஹொசூருக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. ட்ரெயின் வசதி இல்லை. கடலூரிலிருந்தும், பாண்டியிலிருந்தும் 25 பஸ்களாவது தினந்தோறும் பெங்களூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றன. ஆனால் சேலம்-ஹொசூர் வழியாக பெங்களூருக்குச் செல்லும் ட்ரெயின் வாரத்திற்கு ஒன்றே ஒன்றுதான். கடலூர்-விருத்தாஜலம்-சேலம் அகல ரயில்பாதை வெட்டியாக இருக்கிறது. அண்டர் யுடிலைஸ்ட் ட்ரேக் என்றால் த.நாவில் இதுதானாகத்தான் இருக்கும். கூடுதல் ரயில் விட்டால் என்ன?

அது ஒருபுறமிருக்க, நான் ‘ரெட் பஸ்’ மூலமாக ஹொசூருக்கு ஒரு டிக்கட் புக் செய்தேன். எனக்கு வாய்த்த பஸ் ‘எஸ்.ஆர்.எம்’ பஸ் சர்வீஸ். ஏஸி-ஸ்லீப்பர்.  போர்டிங் பாயின்ட் என்று சொல்லி, ‘சிட்டி டிராவல்ஸ்’ என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, வேல் முருகன் தியேட்டர் அருகில் என லேண்ட் மார்க் குறிப்பிடப்பட்டிருந்தது; சிட்டி டிராவல்ஸ்ன் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப் பட்டிருந்தது. இருந்தாலும் இடத்தை உறுதி செய்து கொள்ள, ரெட்பஸ் கொடுத்த, சிட்டிபஸ் காண்டாக்ட் எண்ணைத் தொடர்புகொள்ள, அது எப்பொழுதும்  ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ரெட் பஸ்ஸைத் தொடர்பு கொண்டால், அவர்கள் சென்னை எண்கள் சிலவற்றைக் கொடுக்க, அவர்கள் அணைவரும் ‘ரிப்வேன் விங்கிள்’ போலத் தூங்கப் போய்விட்டார்கள் போல; ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இது என்ன சோதனை என் நொந்துகொண்டு, இரவு ஒன்பதைரைக்கே (ஷெட்யுல்ட்  டிபார்சர் 10.15 pm)  சென்று பார்த்தால், சிட்டி டிராவல்ஸில், ஷட்டர் இறக்கப்பட்டு ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. கடையில் ஒருவரும் இல்லை. இருட்டு.  ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு புண்ணியவான் லைனில் வந்தார். ‘யோவ்... பஸ்வருமா வராதா? எங்கேதான் போர்டிங் பாயின்ட்? நீ சொன்ன ஆபீஸில் பூட்டுல்லப்பா தொங்குது?” என கடுப்படிக்க, அவர் கூலாக, சார் அவுங்க (ரெட் பஸ்), ஏதாவது ஒரு நெம்பரைக் கொடுத்துடுவாங்க.. எனக்கும் (சிட்டி டிராவல்ஸ்) ரெட் பஸ்ஸுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏதோ வயசானவங்க அப்படீங்கறதால சொல்றேன்; கேட்டுக்கங்க. பெரியார் டிப்போவுக்கு முன்னாலேயே நின்னுகிட்டிருங்க... ஒரு பத்தேமுக்காலுக்கு வரும். வந்தா கையைக் காட்டி ஏறிக்குங்க..” வைத்துவிட்டார் கடவுள்.

கையைக் காட்டி ஏறிக் கொள்வதா? இரவு நேரத்தில், காட்டராக்ட் கண்ணை வைத்துக்கொண்டு, அதிபயங்கர வேகத்தில், கண்ணைக்கூசும் ஹெட்லைடோடு வரும் பஸ்ஸைஅடையாளம் கண்டுகொண்டு கைகாட்டுவது எங்கனம்? யாரைக் கேட்க? அருள் வாக்கு சொல்வதோடு விலகிவிட்டாரே சிட்டி டிராவல்ஸ்.

மூத்திர நாற்றம், கொசுக் கூட்டத்தின் படையெடுப்பு ஆகியவற்றைப் பொறுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் ரோடில் தவம்.

ஒரு வழியாக 10.50க்கு வந்தது எஸ்.ஆர்.எம் பஸ். பாய்ந்து சென்று கைகாட்டி, ‘அப்பாடா... “ என ஏறிக் கொண்டேன்.
அதன் பிறகுதான் வந்தது வினை.

திண்டிவனம் தாண்டி, திருவண்ணாமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது பஸ். திடீரென பஸ் முழுவதும். ஏதொ எரியும் வாசனை. புகை.

பஸ்ஸில் உதவிக்கு இருக்கும் ஒரு ஆள், அலறிப் புடைத்துக் கொண்டு, எல்லோரும் பஸ்ஸைவிட்டு இறங்குங்க... ஓடுங்க... அவசரம் என அலறினார்.

பயனிகள் யாவரும் பதறிப்போய் ஓடினர்.  பஸ்ஸின் ‘டைனமோ’ எரிந்து விட்டிருந்தது.  அதனால் பஸ்ஸினுள் புகை. நாற்றம். நல்லவேளை. டிரைவர் சமயோசிதமாக வண்டியை நிறுத்தி விட்டு, எல்லோரையும் இறக்கிவிட்டார். இல்லாவிடில், தீ பரவிவிட்டிருந்தால், தூக்கத்திலேயே,அனைவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகியே செத்திருக்க வேண்டும்.  பெங்களூர்-ஹைதராபாத் ஆம்னி பஸ் ஒன்று இப்படிதானே முப்பது பேரை பலி கொண்டது?

இந்த க்ரைஸிஸை பஸ்ஸின் நிர்வாகம் எதிர்கொண்ட விதம் வினோதாம இருந்தது.  ரோடில் பெண்களும் குழந்தைகளும், சில பெரியவர்களும், நடு இரவில்-ஒரு அத்வானத்தில் அம்போவென நிற்கிறார்கள். உங்களது ஹெட் ஆபீஸைத் தொடர்புகொண்டு, ஒரு வேனையாவது (VAN) ஏற்பாடு செய்யுங்கள். எங்களை அருகில் இருக்கும் பெரிய ஊரிலோ, ஹொசூரிலோ இறக்கிவிடுங்கள். அங்கு வேறு பஸ் பிடிசுக்கிரோம்; இந்த சாலையில் ஆம்னிபஸ்கள் வராது; போக்கு பஸ்களில் ஏற்ற/ஏற முடியாது; கூட்டமாக இருக்கும் என்ற என் கோரிக்கை எவன் காதிலும் விழவில்லை. ரெட்பஸ் காரர்கள் டெம்ளேட் பதில்களைக் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, நடு இரவில், நிர்க்கதியாய் நிற்கும் பயணிகளைப் பற்றி யாதொரு கவலையும் இல்லை. வேறு ஏதாவது பஸ் வந்தால் அதில் ஏற்றிவிடுவார் டிரைவர் என்பதுதான் திரும்பத் திரும்ப சொல்லப் பட்டது.  

வேறு பஸ்ஸோ-வேனோ ஏற்பாடு செய்தால், காசு செலவாகுமே? தனியாருக்கு லாபம் மட்டும்தானே குறி?  இரவு மூன்று மணிவரை அவர்களோடு போராடிவிட்டு, வேறு வழியின்றி  ஒரு போக்கு பஸ்ஸில் ஏறி, நான் கடலூருக்கே திரும்பி வந்துவிட்டேன்.

ஒரு க்ரைஸிஸ் என்றால் இப்படியா, நிர்வாகம் நடந்து கொள்ளும்? நல்ல வேளை பெரும் அளவி தீ பரவவில்லை. பரவியிருந்தால் என்னாவது? அப்பொழுதும்  ரெட் பஸ்காரர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா?
இதே,  அரசு நிறுவனமாக இருந்தால், வேறு ஒரு பஸ் வந்திருக்கும். சட்டையைப் பிடித்துக்கேட்க, ஒரு டிவிஷனல் மேனஜர், கிளை மேனேஜர் இருப்பார். இங்கே, தொலைபேசியை ஆன்ஸர் செய்யக் கூட ஆளில்லை.
இதுதான் ஆம்னி பஸ்களின் சேவை. ஒரு டோக்கன் ப்ரொடெஸ்டாக ரீஃபண்ட் கேட்டிருக்கிறேன். தரமாட்டார்கள். அவ்வளவு தான் அவர்களது தர்மம்..நியாயம்.




2 comments:

  1. இதெல்லாம் சகஜம்... இது குறித்து நாம் கவலைப்பட்டு பலனில்லை சார்... நான் பஸ்சில் பயணித்து வருடங்கள் பல கடந்து விட்டது... காரில் அதுவும் Self Driving தான்... நாம் பணக்காரன் இல்லை... எது வசதியோ அதை தேர்வது நலம்.... அவசரமாக போக இது தவிர வழியில்லை... அதையும் நான் இரவில் செய்வதில்லை சார்..... பகல் பஸ் எரிச்சல் தான்.. நடு ராத்திரி அவஸ்தையை தவிர்க்க வேறு வழியில்லை....
    பாவம்தான்....
    திருநாவுக்கரசு

    ReplyDelete
  2. I had a different experience through RED BUS. I booked a ticket on Red Bus from Thirukkadaiyur to Chennai By Universal Travels - Its boarding time is 6:30 am and the bus may arrive at 7 approx. ( as I have to attend my office 1 pm )
    But the bus didn't come at 7 am.. 7:30 am... 8 .. 8:30 am.. Almost 2 hours I was standing on the bus stand and as usual you specified no body picked up my phone and whatever the numbers they provided & I called.. no response.. or I got that they are not the correct person to be called for this.

    finally I returned by home...thinking that may go around next day or the same day night. Called my manager and explained the situation and apologies.

    Around 9:45 am I got a call from the bus driver and he asked me where am I and also told me that the bus is waiting for me.
    I shouted at him.. he should have called me to inform that the bus may delay due to some reason.. so that at least I can make my availability. Now, I can't take that bus as he is not ready to wait ever for single minute :(:( I lost my 640 Rupees.

    I reported this to Red Bus.. After a week, I got a reply from Redbus that they are very sorry for the incident..and they have taken this to the respective bus admin.. that's all.

    Meanwhile, I reported this to Universel, they told me that since this is booked thru REDBUS they are the responsible person :(

    Anyhow My money and one day leave.. and peace of mind is gone.

    Finally I consoled myself.. Idhellam karma.. that's all.

    Rajaraja.

    ReplyDelete